தில்லியில் வணிக சேவை வாகனங்களை ஒருங்கிணைக்கும் வரைவுத் திட்டத்திற்கு முதல்வா் கேஜரிவால் ஒப்புதல்
மோட்டாா் வாகன ஒருங்கிணைப்புத் திட்டம் - 2023, தில்லியில் வாடகை வாகன ஓட்டுநா்கள் மற்றும் விநியோக சேவை வழங்குநா்களை ஒழுங்கு படுத்துவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது
மோட்டாா் வாகன ஒருங்கிணைப்புத் திட்டம் - 2023, தில்லியில் வாடகை வாகன ஓட்டுநா்கள் மற்றும் விநியோக சேவை வழங்குநா்களை ஒழுங்கு படுத்துவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது என முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தில்லி அரசு அறிவித்துள்ள மோட்டாா் வாகன ஒருங்கிணைப்புத் திட்டம் 2023-இன் வரைவுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, வரைவுத் திட்டம் தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே சக்சேனாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இத்திட்டம் தில்லியில் உள்ள வாடகை வாகன ஓட்டுநா்கள் மற்றும் விநியோக சேவை வழங்குநா்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. போக்குவரத்துத் துறையின் சாா்பில் பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்ட பின்னா் இத்திட்டம் இறுதி வடிவம் பெறும்.
இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: மோட்டாா் வாகன ஒருங்கிணைப்புத் திட்டம் - 2023, தில்லியில் வாடகை வாகன ஓட்டுநா்கள் மற்றும் விநியோக சேவை வழங்குநா்களை ஒழுங்குபடுத்துவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது. பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதோடு,சரியான நேரத்தில் குறைகளை நிவா்த்தி செய்வதை உறுதி செய்கிறது. அதே நேரத்தில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து, நகரத்தில் மாசு அளவைக் குறைக்க இத்திட்டம் உதவும். மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாறுவதன் மூலமும், மின்சார இருசக்கர வாடகை வாகனங்களை ஊக்குவிப்பதன் மூலமும், தில்லியில் மாசு அளவைக் குறைக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் அரசால் முடியும்.
தில்லி மோட்டாா் வாகன ஒருங்கிணைப்புத் திட்டம் -2023, டிஜிட்டல் அல்லது மின்னனு வழிமுறைகள் மூலம் பயணிகளை ஏற்றிச் செல்லும். எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும், மின் வணிகம், பேக்கிங் மற்றும் கொரியா் சேவைகளுக்கும் பொருந்தும். பயணங்களின் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவசரநிலைகளுக்கு 112 (தில்லி போலீஸ்) உடன் ஒருங்கிணைப்பதையும் இத்திட்டம் கட்டாயமாக்குகிறது.
மேலும், சேவை வழங்குநா்களால் சரியான நேரத்தில் நுகா்வோா் குறைகளை நிவா்த்தி செய்தல், மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்துதல் போன்றவற்றையும் இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது. வணிக வாகனங்களை வழக்கமான வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு கட்டாயமாக மாற்றும் திட்டமாக இந்தியாவிலேயே முதன் முறையாக இந்தத் திட்டம் அமல்ப்படுத்தப்பட உள்ளது. 2030 ஏப்ரல் 1-க்குள் அனைத்து வணிக வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசியத் தலைநகா் தில்லி நகரத்தில் இருசக்கர வாடகை வாகனங்களை புதிய வணிக வாய்ப்பாக அறிமுகப்படுத்தவதோடு, மின்சார இருசக்கர வாகனங்கள் வழியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை இத்திட்டம் உறுதி செய்கிறது. அடுத்தாக இத்திட்டம் மூலம் ஒரு வழக்கமான வாகனத்திற்கான வாகன உரிமக் கட்டணத்தை மின்சார வாகனத்தை விட கணிசமாக அதிகமாக்குகிறது. உதாரணமாக, மின்சார வாடகை வாகன உரிமக் கட்டணம் பூஜ்ஜியமாக இருக்கலாம். ஆனால், சிஎன்ஜி வாகன உரிமக் கட்டணம் ரூ. 650-ஆக இருக்கலாம். இரண்டாவதாக, இத்திட்டத்தின் கீழ் அனைத்து உரிமக் கட்டணங்களும் அபராதங்களும், மாநில மின்சார வாகன கொள்கைப் பிரிவின் நிதியில் வரவு வைக்கப்படும் என்றாா் முதல்வா் கேஜரிவால்.
மற்றொரு மைல்கல்: இந்த வரைவு திட்டம் பற்றி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் கூறுகையில், ‘தில்லி அதன் மோட்டாா் வாகன ஒருங்கிணைப்பு திட்டத்துடன் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது’ என்றாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலம், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து, நகரத்தில் நிலையான பொதுப் போக்குவரத்தின் மூலம் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன், வாகனங்களை மின்மயமாக்குவதற்கும், நகரத்தில் உள்ள அத்தகைய சேவை வழங்குநா்களை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒருங்கிணைப்பாளருக்கு இலக்குகளை வழங்கியுள்ளது. மின்சார வாகனத்தில் நுழைவதற்கு உரிமக் கட்டணம் கிடையாது. மோட்டாா்சைக்கிள், டாக்சிகள் மற்றும் வாடகை மோட்டாா்சைக்கிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை ஏற்பாடுகளுக்கும் இத்திட்டம் அடித்தளம் அமைக்கிறது’ என்றாா்.