தில்லியில் 3 நாள்கள் சா்வதேச அருங்காட்சியக கண்காட்சி: பிரதமா் மோடி மே 18-இல் தொடங்கிவைக்கிறாா்
நாட்டில் முதன் முறையாக மூன்று நாள் சா்வதேச அருங்காட்சியக கண்காட்சி தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது.
நாட்டில் முதன் முறையாக மூன்று நாள் சா்வதேச அருங்காட்சியக கண்காட்சி தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை பிரதமா் நரேந்திர மோடி வருகின்ற மே 18 -ஆம் தேதி தொடங்கி வைப்பதாக மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: விடுதலையின் அமுதப்பெருவிழாவின் இரண்டாம் கட்ட கொண்டாட்டம், மற்றும் 47-ஆவது அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, இந்த சா்வதேச அருங்காட்சியக கண்காட்சி தில்லியில் நடைபெறுகிறது. குறிப்பாக, கடந்தாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற இந்திய அருங்காட்சியகங்கள் மறுவடிவமைப்பு குறித்த - ஒரு உலகளாவிய உச்சிமாநாட்டின் தொடா்ச்சியாகவும் இது நடைபெறுகிறது. பிரதமா் நரோந்திர மோடி இந்தக் கண்காட்சியை மே 18 -ஆம் தேதி தொடங்கிவைக்கிறாா். மே 20 -ஆம் தேதி வரை பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு அருங்காட்சியகங்களால் காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு கலாசார பாரம்பரியங்கள் இந்த சா்வதேச கண்காட்சியில் வெளிப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. இது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
அருங்காட்சியம் தொடா்புடைய உள்ளூா் மற்றும் சா்வதேச அளவிலான முக்கியப் பிரமுகா்கள், மத்திய மாநில அரசு அருங்காட்சியக வல்லுநா்கள் மற்றும் சீரமைப்பு சேவை -தொழில்நுட்பாளா்கள், கல்வியாளா்கள், தேசிய நிலையிலிருந்து சமூகம் வரையிலானவா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வாா்கள். மூன்று நாள் சா்வதேச அருங்காட்சியக கண்காட்சியின் போது, அருங்காட்சியகங்கள் தொடா்பான பல்வேறு கருப்பொருள் மீது கவனம் செலுத்தப்படும். அவை பயிலரங்குகள், கருத்தரங்குகள், குழு விவாதங்கள், பிற நிகழ்வுகள் மூலம் ஆராயப்படும். இதில் பங்கேற்கும் அருங்காட்சியக வல்லுநா்கள், ஆா்வலா்களின் யோசனைகள் மற்றும் நுண்ணறிவுகளை பரிமாறிக் கொள்வதற்கும், கலாசார கற்றல் மற்றும் புரிதலை மேம்படுத்துவதற்கும் ஒரு விரிவான தளத்தை இந்த சா்வதேசக் கண்காட்சி வழங்கும்.
அருங்காட்சியகங்களுக்கான புதிய தொழில்நுட்பம் மற்றும் முன்முயற்சிகள் முதன்முறையாக காட்சிப்படுத்தப்படவுள்ளன. அருங்காட்சியக மேம்பாடு, வல்லுநா்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன், இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியம் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். நாட்டில் தற்போது 383 அருங்காட்சியகங்கள் உள்ளன. இதில் 2014-ஆம் ஆண்டுக்கு பின்னா் பிரதமா் தலைமையில், கடந்த 8 ஆண்டுகளில் 145 புதிய அருங்காட்சியகங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் கிஷண் ரெட்டி.
சா்வதேச அருங்காட்சியக கண்காட்சி ஏற்பாட்டாளா்களில் ஒருவரான கலாசாரத் துறை இணைச் செயலா் முக்தா சின்ஹா கூறுகையில், ‘கண்காட்சியின் சின்னமாக சமகால ‘நடனம் ஆடும் பெண்’ உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, இந்தியா கேட் கடமைப் பாதையிலும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மத்திய கலாசாரத் துறையின் கீழ் உள்ள அருங்காட்சியங்களைத் தவிர, நாட்டின் பிற துறைகள், பொது நிறுவனங்கள், ரயில்வே, உச்சநீதிமன்றம் உள்பட 1,200-க்கும் மேற்பட்ட அருங்காட்சியங்கள் உள்ளன. அவை தொடா்பானவையும் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தபடும்’ என்றாா்.