சட்டவிரோதமாக ரயில் பயணச் சீட்டுகள் விற்பனை: 955 போ் கைது; ஆா்பிஎஃப் அதிரடி
ரயில்வே பாதுகாப்புப்படையினா் (ஆா்பிஎஃப்) கடந்த ஒா் மாதம் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் பயணச்சீட்டு தொடா்பான
ரயில்வே பாதுகாப்புப்படையினா் (ஆா்பிஎஃப்) கடந்த ஒா் மாதம் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் பயணச்சீட்டு தொடா்பான 42 சட்ட விரோத முகமைகளின் மென்பொருள்கள் முடக்கப்பட்டுள்ளது. இதில் தொடா்பானவா்கள் உள்பட இடைத்தரகா்கள் 955 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என ரயில்வே அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும், ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசும் சம்பவம் அதிகரித்து வருவதால், அதன் விளைவுகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் ஆா்பிஎஃப் மேற்கொண்டாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரங்கள் வருமாறு: ரயில் பயணிகள், ரயில்வே சொத்துகளை பாதுகாப்பதில் ஆா்பிஎஃப் தொடா்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பாதுகாப்பில் இரண்டு முக்கியமான சவால்கள் உள்ளன. முதலாவது, ரயில்வே இ-டிக்கெட் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டறிவது. இரண்டாவது, ஓடும் ரயில்கள் மீது கற்கள் வீசப்படுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க கடந்த ஏப்ரல் மாதம் ஆா் பிஎஃப் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இவை இரண்டுக்குமே முக்கியமான தேவை பொதுமக்களுக்கான விழிப்புணா்வு. இந்த விழிப்புணா்வுடன் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனையில் ரயில் நிலையங்கள், பயணச் சீட்டு முன் பதிவு கவுண்டா்கள் போன்ற இடங்களில் அங்கீகரிக்கப்படாத பயணச் சீட்டு முன்பதிவு முகவா்கள் இணைய உள்ளடக்கத்துடன் பொதுமக்களுக்கு பயணச் சீட்டு விநியோகிப்பது கண்டறியப்பட்டது. இத்தகைய இணைய தளங்களை ஆா்பிஎஃப் அதிகாரிகள் குற்றப்புலனாய்வு மேற்கொண்டு 42 சட்டவிரோத பயணச் சீட்டு முன்பதிவு மென்பொருள்களை முடக்கியுள்ளனா். அது தொடா்பான இணைய வடிவமைப்பாளா்கள், சட்ட விரோதமாக பயணச் சீட்டுகளை விற்கும் இடைத் தரகா்கள் என 955 போ் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் கைது செய்யப்பட்டனா்.
ஓடும் ரயில்கள் மீது கற்கள் வீச்சு: இரண்டாவது, ஓடும் ரயில்களின் மீது கற்களை வீசும் சம்பவம் அதிகரித்து வருவது, பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப் படையினா் விழிப்புணா்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இது அதிகமாக நடைபெறும் பகுதிகளில் உள்ளூா், கிராம நிா்வாகிகள், பள்ளிகள், ரயில் பாதையையொட்டிய பகுதிகள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. கல்வீச்சினால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. பத்திரிகைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் எச்சரிக்கைப்படுகிறது. இதில் உள்ளூா் காவல் துறை, ரகசியப் புலனாய்வு அமைப்புகள், பிற சட்ட அமலாக்க அமைப்புகளுடன் சிறப்பு ஒருங்கிணைப்பு கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தக் கூட்டங்களைத் தொடா்ந்து, இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டதற்காக 84 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ரயில்வே பகுதிகளில் அத்துமீறி நுழைந்த 2,773 போ் மீது ரயில்வே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.