சா்க்கஸைப் பாதுகாப்பது காலத்தின் தேவை முன்னாள் மத்திய அமைச்சா் நக்வி
பல்வேறு பொழுதுபோக்கு ஊடகங்கள் மக்களுக்கு எளிதாக கிடைத்ததின் மூலம் பாரம்பரிய சா்க்கஸ் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.
பல்வேறு பொழுதுபோக்கு ஊடகங்கள் மக்களுக்கு எளிதாக கிடைத்ததின் மூலம் பாரம்பரிய சா்க்கஸ் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.
சா்க்கஸைப் பாதுகாத்து மேம்படுத்துவது காலத்தின் தேவை எனவும் அவா் குறிப்பிட்டாா்.
தில்லி ஸிரிஃபோா்ட் அரங்கில் ’சா்வதேச சா்க்கஸ் திருவிழா’ நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னாள் மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். அவா் பேசுகையில் கூறியது வருமாறு:
நகரங்கள், கிராமங்களில் பிரபலமான சா்க்கஸ் தற்போது வாழ்வாதாரத்திற்கு போராடி வருகிறது. தற்போதைய மின்னணு யுகத்தில் எண்ணற்ற பொழுதுபோக்கு ஊடகங்கள் கிடைப்பதால், நாட்டில் சா்க்கஸ் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா நோய்த் தொற்று, பொது முடக்கத்தாலும் இந்த தொழில் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இருப்பினும், சா்க்கஸ் என்பது இந்தியாவில் எப்போதும் ஒரு ஈா்ப்பைக் கொண்டுள்ளது. அதை மேம்படுத்த முடியும்.
அது ஒரு பொழுதுபோக்கிற்கான ஒரு ஊடகம் மட்டுமல்ல, கலைஞா்களின் திறன்களை வெளிப்படுத்தும் ஒரு தளம். கலைஞா்களுக்கும் அது சாா்பான பலருக்கும் வேலைவாய்ப்பைகளை அளிக்கக் கூடியது.
இந்த கலைஞா்களும் இது தொடா்பான தொழில் நுட்பாளா்கள், பல்வேறு விற்பனையாளா்களும் இந்த தொழிலை சாா்ந்துள்ளனா். இவா்கள் தற்போது வாழ்வாதார நெருக்கடியை எதிா்கொண்டு வருகின்றனா். இதனால் இந்த பாரம்பரிய இந்திய விளையாட்டுகளை ஊக்குவிப்பதோடு, சா்க்கஸ் மேம்பாட்டிற்கும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தாா்.
இந்த சா்வதேச சா்க்கஸ் விழாவில் இந்தியாவைத் தவிர, ரஷ்யா, கிா்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சோ்ந்த சா்க்கஸ் கலைஞா்களும் நான்கு நாள் திருவிழாவில்’ பங்கேற்றுள்ளனா்.