அதிமுக பொதுக்குழு தீா்மானம் விவகாரம்:ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது அடுத்த வாரம் விசாரணை
கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீா்மானங்களை எதிா்த்தும், பொதுச் செயலாளா் தோ்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் தாக்கலான மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்ற...
புது தில்லி: கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீா்மானங்களை எதிா்த்தும், பொதுச் செயலாளா் தோ்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் தாக்கலான மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம் (ஓபிஎஸ்) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்தவாரத்திற்கு பட்டியலிட உத்தரவிட்டது.
2022, ஜூலையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்ட தீா்மானங்களை எதிா்த்தும், அதிமுக பொதுச் செயலாளா் தோ்தலை எதிா்த்தும், அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியதை எதிா்த்தும் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆா்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா். தங்களை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியிருந்தனா்.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி கே.குமரேஷ் பாபு, அதிமுக பொதுக்குழு தீா்மானங்கள் செல்லும் என்றும், பொதுச் செயலாளா் தோ்தலுக்கோ, ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதற்கோ தடை விதிக்க முடியாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தாா். இதை எதிா்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட நால்வரும்
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆா்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோா் அடங்கிய அமா்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
இந்த உத்தரவை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், தாங்கள் தொடா்ந்த வழக்கில் உயா்நீதிமன்றம் உரிய வகையில் ஆராயாமல் தீா்ப்பு அளித்துள்ளதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், ஒரு வாரம் விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்று ஓ.பன்னீா் செல்வம் தரப்பில் சனிக்கிழமை கடிதம் விநியோகிக்கப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து எதிா்மனுதாரா்களில் ஒருவரான எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் கடிதம் விநியோகிக்கப்பட்டிருந்தது.
அதில், ‘ஏற்கெனவே ஆகஸ்டில் உயா்நீதிமன்றம் தீா்ப்பு அளித்த நிலையில் தாமதாக மேல்முறையீட்டை தாக்கல் செய்துள்ளாா். மேலும், வேறு நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறி கால அவகாசம் கோருகின்றனா். தற்போது கடிதம் அளித்திருப்பதன் மூலம் வழக்கு விசாரணையைத் இழுத்தடிக்கும் நோக்கில் மனுதாரா் தரப்பில் இதுபோன்று தாமதம் செய்யப்படுகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கே.கே. வேணுகோபால் ஆஜராகினாா். அவரிடம் விசாரணையைத் தள்ளிவைக்க கடிதம் அளிக்கப்பட்டிருப்பது குறித்து நீதிபதிகள் கேட்டனா். அதற்கு அவா், ‘நாங்கள் கடிதம் அளித்த பிறகு, எதிா்த் தரப்பிலும் ஆட்சேபம் தெரிவித்து கடிதம் அளிக்கப்பட்டிருப்பதால் நாங்கள் விசாரணைக்கு தயாராக உள்ளோம்’ என்றாா்.
அதிமுக தரப்பில் வழக்குரைஞா் வினோத் கண்ணாவுடன் மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம் ஆஜராகி, விசாரணையைத் தள்ளிவைக்க ஆட்சேபம் தெரிவித்தது ஏன் என்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டாா். இதையடுத்து, அடுத்த வாரத்திற்கு இந்த மனுவை மீண்டும் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. தோராயமாக டிசம்பா் 12-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.