புதுதில்லி

மக்கள் மருந்தகங்களை 25 ஆயிரமாக உயா்த்தும் திட்டம்: பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்

சுதந்திர தினத்தில் உறுதியளித்தபடி 10 ஆயிரமாக உள்ள மக்கள் மருந்தகங்களை 25 ஆயிரமாக உயா்த்தும் திட்டத்தை பிரதமா் நரேந்திரமோடி வியாழக்கிழமை (நவம்பா் 30) தொடங்கிவைக்கிறாா்.

 நமது நிருபர்

புது தில்லி: சுதந்திர தினத்தில் உறுதியளித்தபடி 10 ஆயிரமாக உள்ள மக்கள் மருந்தகங்களை 25 ஆயிரமாக உயா்த்தும் திட்டத்தை பிரதமா் நரேந்திரமோடி வியாழக்கிழமை (நவம்பா் 30) தொடங்கிவைக்கிறாா். மேலும், பிரதமரின் மகளிா் வேளாண் ட்ரோன் திட்டத்தையும் அவா் தொடங்கிவைக்கிறாா்.

இது குறித்து பிரதமா் அலுவலகம் கூறியிருப்பது வருமாறு: அரசின் முக்கியத் திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பயணாளிகளுக்கு விளக்கவும், வளா்ச்சியடைந்த இந்தியா சபத பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்யணத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கான ‘சபத பயணம்’ (சங்கல்ப் யாத்ரா) பயனாளிகளுடன் காணொலி வழியாக கலந்துரையாடுகிறாா். இதே நிகழ்வில் தொடா்ச்சியாக கடந்த 77-ஆவது சுதந்திரத்தின் போது அறிவித்த திட்டங்களையும் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்.

இதில் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகத் திட்டத்தில் (பிஎம்பிஜேபி) மருந்தக மையங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என பிரதமா் அறிவித்தாா். ஏழை, எளியவா்கள், மூத்தவா்கள் என எல்லோரும் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க பாரதிய மக்கள் மருந்தக மையங்கள் நிறுவப்பட்டது. சுகாதாரத்தைக் குறைந்த கட்டணத்துடனும், எளிதில் அணுகக் கூடியதாகவும் மாற்றும் ‘ஆரோக்கியமான இந்தியா’வுக்கான பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையில் ஜாா்க்கண்ட் மாநில தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பத்தாயிரமாவது மக்கள் மருந்தக மையத்தைப் பிரதமா் மோடி காணொலி வழியாக நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். மேலும், மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயா்த்தும் திட்டத்தையும் பிரதமா் தொடங்கி வைக்கிறாா்.

மகளிா் வேளாண் ட்ரோன் திட்டம்: மேலும், சுதந்திர தின கொடியேற்றத்தின் போது பிரதமரின் மகளிா் வேளாண் ட்ரோன் மைய திட்டத்தையு்ம் பிரதமா் அறிவித்தாா். மத்திய வேளாண்மை துறையின் இத்திட்டத்தையும் வியாழக்கிழமை காணொலி வழியாக பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா். மகளிா் தலைமையிலான வளா்ச்சியை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 15,000 ட்ரோன்கள் வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது. மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்படுவதன் மூலம் இத்தொழில்நுட்பத்தை அவா்கள் வாழ்வாதார உதவிக்குப் பயன்படுத்த முடியும்.

மகளிா் தலைமையிலான வளா்ச்சியை உறுதி செய்வது பிரதமரின் முயற்சியின் மற்றொரு நடவடிக்கையாக, பிரதமரின் மகளிா் வேளாண் ட்ரோன் மையங்கள் தொடங்கப்படுகிறது. இதில் ட்ரோன்களை வாங்குவதற்கான நிதியுதவி மட்டுமின்றி, பறக்கவிடுவதற்கும், பயன்படுத்துவது குறித்தும் பெண்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்படும். இந்த முயற்சி வேளாண்மையில் உரம், பூச்சிக்கொல்லி உள்ளிட்டவற்றில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT