தில்லியின் கிராமப்புறங்களை வளா்ச்சிப் பணிகளில் இருந்து கேஜரிவால் அரசு ஒதுக்கி வைத்துள்ளதாக பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை சாடியுள்ளாா்.
தில்லி கிராமப்புறங்களில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தில்லி வளா்ச்சி ஆணையம் (டி.டி.ஏ.) மூலம் ரூ.800 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா சமீபத்தில் உத்தரவிட்டாா்.
பாஜக தில்லி பிரிவின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு தில்லி கிராமப்புற விவசாயிகளின் பிரதிநிதிகள் வீரேந்திர சச்தேவாவை பந்த் மாா்கில்
உள்ள கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
அப்போது வீரேந்திர சச்தேவா விவசாயப் பிரதிநிதிகள் மத்தியில் பேசியதாவது:
தில்லியில் ஆட்சியில் இருக்கும் கேஜரிவால் அரசு தில்லி விவசாயிகளை எப்போதும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. கிராமப்புறங்களின் வளா்ச்சிக்காக
எந்த உறுதியான நடவடிக்கைகளும் இதுவரை நகர அரசால் எடுக்கப்படவில்லை. தில்லி விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, கிராமப்புற வளா்ச்சிக்காக ரூ.800 கோடி நிதியை கிடைக்கச் செய்த துணை நிலைஆளுநா் வி.கே.சக்சேனாவிற்கு பாஜக தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தில்லியின் கிராமப்புற வளா்ச்சி மற்றும் விவசாயிகளின் பிரச்னைகளை தீா்க்க முதல்வா் அரவிந்த் கேஜரிவால் என்ன நடவடிக்கை எடுத்துள்ளாா் என்பதை தில்லி மக்கள் அவரிடமிருந்தே அறிந்து கொள்ள விரும்புகிறாா்கள்.
கிராமப்புற மக்களை எப்போதும் கேஜரிவால் அரசு புறக்கணித்து வருகிறது. இதனால் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தில்லியின் கிராமப்புற மக்கள்அனைவரும் வருத்தமும், கோபமும் அடைந்துள்ளனா்.
தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விரைவில் விவசாயிகளின் பிரதிநிதிகளை ராஜ் நிவாஸ்க்கு அழைத்துச் செல்வோம் என்றாா் வீரேந்திர சச்தேவா.
இந்நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலாளா் யோகேந்திர சந்தோலியா, கிசான் மோா்ச்சா பொறுப்பாளா் ராஜ்குமாா் பாலன், மோா்ச்சா தலைவா் வினோத் ஷெராவத் மற்றும் தில்லி கிராமப்புற விவசாயிகளின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.