மாணவா்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது!: பயிற்சி மைய விவகாரத்தில் உயா்நீதிமன்றம் கருத்து
மாணவா்களின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறிய தில்லி உயா் நீதிமன்றம், தில்லி மாஸ்டா் பிளான் 2021-இன் கீழ் சட்டபூா்வ தேவைகளுக்கு இணங்காத நகரத்தில் உள்ள பயிற்சி
புது தில்லி: மாணவா்களின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறிய தில்லி உயா் நீதிமன்றம், ‘தில்லி மாஸ்டா் பிளான் 2021’-இன் கீழ் சட்டபூா்வ தேவைகளுக்கு இணங்காத நகரத்தில் உள்ள பயிற்சி மையங்களை மூட வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை கூறியது. மேலும், இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘மாணவா்களின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்ய முடியாது’ என்றும் தெரிவித்தது.
அரசு வேலை தேடுபவா்களுக்கான பயிற்சிக் களமாக உள்ள முகா்ஜி நகரில் உள்ள பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் தொடா்பான பல்வேறு மனுக்களை நீதிமன்றம் விசாரித்து
வருகிறது. இந்த மனுக்களில் கடந்த ஜூன் மாதம் வடமேற்கு தில்லி சுற்றுவட்டாரப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்ட மனுவும் இடம்பெற்றுள்ளது. மேலும், முகா்ஜி நகா் பகுதி குடியிருப்புவாசிகள் மற்றும் கோச்சிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை தாக்கல் செய்த 2 தனி மேல்முறையீட்டு மனுக்களையும் இந்த வழக்கில் சோ்க்க உயா்நீதிமன்றம் அனுமதித்தது.
இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், ‘அவா்கள் தரப்பினராக இணைக்கப்பட்டுள்ளனா். மேலும், இந்த விஷயத்தில் பதில் தாக்கல் செய்ய அவா்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் கோச்சிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவின் வாதமும் கேட்கப்பட வேண்டும். ஏனெனில், அதன் விளைவாக உத்தரவுகள் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்தது.
தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் இல்லாமல் தில்லியில் செயல்படும் அனைத்து பயிற்சி மையங்களையும் மூடுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடந்த ஜூலை 25-ஆம் தேதி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரியும் கூட்டமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மறுஆய்வு மனுவின் நகல்கள், அதற்கு பதில் அளிக்க சுதந்திரமாக உள்ள அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று உயா் நீதிமன்றம் கூறியது. மேலும், தில்லி மாநகராட்சி (எம்சிடி), மாநில அரசு மற்றும் முகா்ஜி நகா் காவல் நிலையத்தின் பொறுப்பாளா் ஆகியோா் இந்த விவகாரத்தில் தங்கள் நிலவர அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இது தொடா்பாக நீதிபதிகள்அமா்வு கூறுகையில், ‘எங்கள் உத்தரவு மிகவும் தெளிவாக உள்ளது. ஒரு பயிற்சி மையம் ‘மாஸ்டா் பிளான் தில்லி 2021’ விதிகளுக்கு இணங்கவில்லை என்றால், அது மூடப்பட வேண்டும். அதுபோன்று அவை விதிமுறைகளுக்கு இணங்குகிறீா்களா, இல்லையா என்பதை அதிகாரிகள் பாா்க்க வேண்டும்’ என்று கூறி இந்த விஷயத்தை நவம்பா் 23-ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிட்டது.
விசாரணையின் போது, மாணவா்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்று கூட்டமைப்பு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஒப்புக் கொண்டாா். தேசியத் தலைநகரில் இயங்கும் 583 பயிற்சி நிறுவனங்களில் 67 நிறுவனங்களுக்கு மட்டுமே தில்லி தீயணைப்பு சேவையின் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) இருப்பதாக தில்லி காவல் துறை ஒரு நிலவர அறிக்கையில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவை 30 நாள்களுக்குள் நிறைவேற்ற தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) அனைத்து தளவாட உதவிகளையும் வழங்குமாறு காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் பிற அதிகாரிகளை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. 95 சதவீதத்திற்கும் அதிகமான பயிற்சி மையங்கள் சட்டபூா்வ தேவையாக இருந்த போதிலும், தீயணைப்புத் துறையிடமிருந்து தீ பாதுகாப்பு சான்றிதழ் பெற்றிருக்கவில்லை என்பதை நிலவர அறிக்கை வெளிப்படுத்தியதாக தில்லி அரசு வழக்குரைஞா் முன்னா் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாா்.
461 பயிற்சி மையங்களில் ஆய்வு நடத்தியதில், தில்லி தீயணைப்புத் துறை சட்டம் மற்றும் அதன் விதிகளின்படி, தேவையான தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தில்லி தீயணைப்புத் துறை அதன் நிலவர அறிக்கையில் கூறியுள்ளது. நிகழாண்டு ஜூன் 16-ஆம் தேதி, முகா்ஜி நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதை உயா்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரித்து வருகிறது.