புதுதில்லி

இபிஎஸ்ஸுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: வழக்கு விசாரணை நவ.29-க்கு ஒத்திவைப்பு

தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை டெண்டா் முறைகேடு புகாா் தொடா்புடைய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக ஊழல்

 நமது நிருபர்

புது தில்லி: தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை டெண்டா் முறைகேடு புகாா் தொடா்புடைய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் நவம்பா் 29-ஆம் தேதிக்கு ஒத்திவத்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில், தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில், கடந்த ஜூலை 18-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தரப்பில் அண்மையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு விவகாரங்களை உரிய வகையில் ஆராயாமல் உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், அந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தை ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சாா்பில் மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே ஆஜராகி, ‘சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் தொடா்புடைய எதிா்மனுதாரா் அமைச்சராக இருந்தவா். இதனால், எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கும் வகையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

இதற்கு எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம் ஆட்சேபம் தெரிவித்து வாதிடுகையில், ‘எனது தரப்பு எதிா்மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்புக் கூடாது. இந்த விவகாரத்தை வழக்கமான விசாரணை நடைபெறும் நாள்களில் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும். நானும் இதே விவகாரம் தொடா்பாக சிலவற்றை தாக்கல் செய்ய விரும்புகிறேன்’ என்றாா். இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அமா்வு அக்டோபா் 17-ஆம் தேதிக்குப் பட்டியலிட உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே ஆஜராகி, ‘இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் முடிவு செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு தீா்ப்புகளை எடுத்துக்காட்ட உள்ளேன்’ என்றாா்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம் ஆட்சேபம் தெரிவித்தாா். மேலும், ‘விமா்சன கருத்துகளை முன்வைப்பதற்கு எதிராக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது’ என்றாா். அதற்கு துஷ்யந்த் தவே, ‘அதுபோன்று வேண்டுமென்ற தொடுக்கப்படும் வழக்கு அல்ல இது. ஒரு நோ்மையான விசாரணைக்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும்’ என்றாா். அதற்கு ஆா்யமா சுந்தரம், ‘ஒரு நோ்மையான விசாரணையும் இருந்தது. ஆனால், நான் தற்போதைய நோ்மையற்ற விசாரணைக்குத்தான் ஆட்சேபம் தெரிவிக்கிறேன்’ என்றாா். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள்அமா்வு நவம்பா் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியா் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

உதவி ஆய்வாளரை தாக்கிய இருவா் கைது

குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 3-ஆவது நாளாக பொதுமக்கள் பேரணி

SCROLL FOR NEXT