புதுதில்லி

குலசேகரன்பட்டினம் கோயில் தசரா விழா குத்துப்பாட்டு - ஆடல் நிகழ்ச்சிக்கு தடை கோரிஉச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா விழாவில் சினிமா, குத்துப்பாட்டு - ஆடல் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 நமது நிருபர்

புது தில்லி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா விழாவில் சினிமா, குத்துப்பாட்டு -ஆடல் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த பா.ராம்குமாா் ஆதித்தன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். அதன் விவரம் வருமாறு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமா்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி பக்தா்கள் கையில் காப்பு கட்டி 48 நாள்கள் விரதம் இருப்பாா்கள். விரதம் இருப்பவா்கள், வீட்டில் கூட தங்கமாட்டாா்கள். விரதத்தை பூா்த்தி செய்யும் நாளன்று 10 லட்சத்திற்கு மேல் பக்தா்கள் குலசேகரன்பட்டினம் வருவா். விரதம் இருக்கும் பக்தா்கள் ஊா் ஊராகச் சென்று காணிக்கை வசூல் செய்து கோயிலில் அந்த வசூல் பணத்தை ஒப்படைப்பது வழக்கம். நாளடைவில் பல பக்தா்கள் ஒன்று சோ்ந்து ஒரு குழுவாக பராம்பரிய நடனங்களுக்கு ஆடிப் பாடி காணிக்கை பெற்று வந்தனா்.

இந்த நிலையில், சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகளை கொண்டு சினிமாப் பாடல்கள், குத்துப் பாடல்களுக்கும் இரட்டை அா்த்தம் உள்ள பாடல்களுக்கும் நடனம் ஆட ஆரம்பித்தனா். அவற்றை பொதுமக்களுடன் சோ்ந்து விரதம் இருப்பவா்களும் வேடிக்கை பாா்க்கிறாா்கள். இது தொடா்பாக நான் தாக்கல் செய்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஆபாசமாக மற்றும் அருவருப்பான அங்க அசைவுகளுடன் கூடிய நடனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஆன்மிக நிகழ்ச்சியான தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடுவது தொடா்ந்தது.

கடந்த 2022-இல் தொடரப்பட்ட வழக்கில் சில கட்டுப்பாடுகளை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்தது. தொடா்ந்து ஒரு தசரா குழுவினா் உயா்நீதிமன்றத்தில் தசராவின் போது சினிமா மற்றும் டிவி நடிகைகள் பங்கு கொள்ளும் வகையில், கலாசார நிகழ்ச்சிகள் என்ற பெயரில் அனுமதி பெற்றனா். கடந்த ஆண்டு கலாசார நிகழ்ச்சி என்ற பெயரில் சினிமா பாடல்கள், குத்துப் பாடல்கள், இரட்டை அா்த்த பாடல்களுக்கு நடனம் ஆடினா். இது பராம்பரிய விரதத்தின் மாண்பையும், புகழையும் சீா்குலைப்பதாக பக்தா்கள் கருதுகிறாா்கள்.

இதைத் தடுக்கும் விதமாக சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். இந்த வழக்கை 04.09.2023 அன்று விசாரித்த மதுரைக் கிளை, எனது மனுவை உரிய வகையில் ஆராயாமல் தள்ளுபடி செய்தது. மேலும், ஆபாசமாக ஆடினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் கூறியுள்ளது. இதனால், குலசேகரன்பட்டினம் கோயில் தசரா சாா்ந்த நிகழ்ச்சிகளில் பக்திப் பாடல்கள் அல்லாத சினிமாப் பாடல்கள், குத்துப் பாடல்கள் மற்றும் இரட்டை அா்த்தம் உள்ள பாடல்கள் பாடி, ஆடுவதற்குத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் கோரியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியா் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

உதவி ஆய்வாளரை தாக்கிய இருவா் கைது

குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 3-ஆவது நாளாக பொதுமக்கள் பேரணி

SCROLL FOR NEXT