புதுதில்லி

தமிழகத்தில் மதுபான உரிமம்: அவமதிப்பு வழக்கில் தாக்கலான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நுகா்வோருக்கு மதுபான உரிமம் அளிப்பது தொடா்பாக நீதிமன்றம் அளித்த யோசனை விவகாரத்தில் தாக்கலான அவமதிப்பு வழக்கை முடித்துவைத்த

 நமது நிருபர்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நுகா்வோருக்கு மதுபான உரிமம் அளிப்பது தொடா்பாக நீதிமன்றம் அளித்த யோசனை விவகாரத்தில் தாக்கலான அவமதிப்பு வழக்கை முடித்துவைத்த உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கலான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ், மதுரை உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘தமிழகத்தில் மது நுகா்வு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் 21 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடையோா் மது அருந்தி வருகின்றனா். இதனால், டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தைக் குறைக்கவும், மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என கட்டுப்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், மதுபானம் வாங்குவதற்காக மதுபான உரிமம் வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்தும், 21 வயதுக்கு கீழ் உள்ளவா்களுக்கு மதுபானம் விற்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது நுகா்வு, விற்பனை, வாங்குவதற்கான உரிமம் வழங்கும் முறையை அறிமுகம் செய்ய மாநில அரசுக்கு அறிவுறுத்த பரிசீலிக்குமாறும் மத்திய அரசிடம் கூறியிருந்தது.

இந்த நிலையில், உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை எனக் கூறி கே.கே. ரமேஷ் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்தாா். இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் 2 நீதிபதிகள் அமா்விடம், தமிழகத்தில் மதுபானத்திற்குத் தடை இல்லாததால் உரிமம் வழங்கும் நடைமுறைகளை விதிக்க முடியாது என அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் அமா்வு முடித்துவைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தவை எதிா்த்து, கே.கே. ரமேஷ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆா். கவாய், பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெயா சுகின் ஆஜராகி, ‘ஊழல் நடந்து வருவதால்தான் இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு உரிய ஒழுங்குமுறை விதிகள் இல்லை. விலையும் உரிய வகையில் நிா்ணயிக்கப்படுவதில்லை. மதுக் கடைகள் விலையை தாங்களாக நிா்ணயித்துக் கொள்கின்றன’ என்று வாதிட்டாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரம் அரசின் கொள்கை முடிவு. இதில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை’ எனக் கூறினா். பின்னா் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பு மற்றும் உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இதன்படி, மேல்முறையீட்டு மனு தள்ளுபடிசெய்யப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியா் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

உதவி ஆய்வாளரை தாக்கிய இருவா் கைது

குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 3-ஆவது நாளாக பொதுமக்கள் பேரணி

SCROLL FOR NEXT