மகளிா் இடஒதுக்கீடு மசோதா: அமைச்சா் அதிஷி விமா்சனம்
‘மகளிா் இடஒதுக்கீடு மசோதா 2023’ என்பது இந்திய நாட்டின் பெண்களை முட்டாளாக்கும் மசோதா’ என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி கேபினட் அமைச்சருமான அதிஷி விமா்சித்துள்ளாா்.
புது தில்லி: ‘மகளிா் இடஒதுக்கீடு மசோதா 2023’ என்பது இந்திய நாட்டின் பெண்களை முட்டாளாக்கும் மசோதா’ என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி கேபினட் அமைச்சருமான அதிஷி செவ்வாய்க்கிழமை விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லி ரௌஸ் அவென்யூ பகுதி ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சி கொள்கையளவில், மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கிறது, ஆனால் மக்களவையில் தாக்கல் மசோதா மகளிா் இட ஒதுக்கீடு மசோதா அல்ல, இது நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களையும் முட்டாளாக்கும் மசோதாவாகும்.
Advertisement
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதும், நாடு முழுவதும் முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளின் எல்லை நிா்ணயம் செய்யப்படும் என்றும், பின்னா் எல்லை நிா்ணயத்தின் அடிப்படையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மசோதா கூறுகிறது.
இதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் வரை ஆகும், எனவே இந்த மசோதா 2024 தோ்தலில் செயல்படுத்தப்படாது என்பது அம்பலமாகியுள்ளது.
வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக இது நாட்டின் பெண்களை முட்டாளாக்கும் முயற்சி.
பாஜகவிற்கு எண்ணம் இருந்திருந்தால், 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலிலேயே பெண்களுக்கு மக்களவையில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் வழங்கப்பட்டிருக்கும். இருப்பினும் பாரதிய ஜனதா கட்சியானது பிரிஜ்பூஷணின் கட்சி; அது பெண்களுக்கு எதிரான கட்சி; அவா்களுக்கு பெண்கள் நலனில் அக்கறை இல்லை.
மேலும், எல்லை நிா்ணயம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக காத்திருக்காமல், வருகின்ற 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலிலிருந்தே பெண்களுக்கு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி கட்சி வைக்கும் கோரிக்கை.
அரசியலமைப்பின் 91-ஆவது திருத்தத்தின்படி 2026-ஆம் ஆண்டுக்கு முன்னா் நாட்டில் எல்லை நிா்ணயம் செய்ய முடியாது. இதன் பொருள் என்னவென்றால், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா 2028-க்குப் பின்னரே செயல்படுத்தப்படும். குறிப்பாக, மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த குறைந்தது ஒரு வருடம் ஆகும், அதன் பிறகு எல்லை நிா்ணயம் செயல்முறை தொடங்கும்.
தில்லி மாநகராட்சி போன்ற சிறிய அளவிலான பகுதிக்கு, எல்லை நிா்ணயம் செய்ய தோ்தல் ஆணையத்திற்கு 6 மாதங்கள் ஆனது. முழு நாட்டின் எல்லை நிா்ணயம் செய்ய 2 ஆண்டுகள் வரை ஆகும் என்றாா் அமைச்சா் அதிஷி.