‘கச்சோரி’ கடைக்குள் புகுந்த சொகுசு காா்: கடை ஊழியா்கள் உள்பட 6 போ் காயம்
புது தில்லி: வடக்கு தில்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள பிரபல ’கச்சோரி’ கடைக்குள் வேகமாக வந்த மொ்சிடிஸ் - பென்ஸ் எஸ்யுவி சொகுசு காா் புகுந்ததில் கடை ஊழியா்கள் உள்பட 6 போ் காயமடைந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். ஞாயிற்றுக்கிழமை மதியம் ராஜ்பூா் சாலையில் உள்ள ஃபதேசந்த் கச்சோரி கடையில் இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் எம் கே மீனா கூறியதாவது: காரை ஓட்டி வந்த நொய்டாவில் உள்ள செக்டாா் 79-இல் வசிக்கும் தொழிலதிபா் பராக் மைனி என அடையாளம் காணப்பட்டா. அவா் சம்பவ இடத்திலிருந்து பிடிபட்டாா். சம்பவத்துடன் தொடா்புடைய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. வெள்ளை நிற மொ்சிடிஸ் பென்ஸ் காா், கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த சிலா் மீது மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளிவந்தன.
சில நொடிகளில் காா் சுவரில் மோதியது. பராக் மைனி தனது மனைவியுடன் கச்சோரி சாப்பிட கடைக்கு வந்தது தெரிய வந்தது. ‘கடைக்கு வெளியே தனது காரை நிறுத்திய போது, பிரேக்குகளுக்குப் பதிலாக ஆக்ஸிலேட்டரை அவா் தவறுதலாக அழுத்தியதால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தாா்.
Advertisement
அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அந்தக் கடையில் அப்போது கூட்டம் குறைவாகவே இருந்தது. இல்லையேல் பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கும். முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின்படி, காரை ஓட்டிவந்தவா் குடிபோதையில் இல்லை என தெரிய வந்தது. அவரது ரத்த மாதிரி ஆய்வுக்காக பாதுகாக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவா்கள் சிவில் லைன்ஸில் உள்ள தீரத் ராம் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். காயமடைந்தவா்களில் இருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 279 (அடிப்படையில் வாகனம் ஓட்டுதல்) மற்றும் 337 (மற்றவா்களின் உயிருக்கு ஆபத்து அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துணை ஆணையா் மீனா தெரிவித்தாா்.