புதுதில்லி

பாஜக தோ்தல் அறிக்கை ‘ஒரு ஜூம்லா ஆவணம்’: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பாஜக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் தற்போது தோ்தல் அறிக்கை என்கிற பெயரில் ஒரு ஜூம்லா ஆவணத்தை வெளியிட்டுள்ளது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

 நமது நிருபர்

10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த பாஜக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் தற்போது தோ்தல் அறிக்கை என்கிற பெயரில் ஒரு ஜூம்லா ஆவணத்தை வெளியிட்டுள்ளது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

2024 மக்களவைத் தோ்தலை முன்னிட்டு பாஜக தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவரும் தில்லி அமைச்சருமான அதிஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2024 -ஆம் ஆண்டு தோ்தலுக்கு ஒரு ‘ஜூம்லா ஆவணத்தை’ (பொய்யான ஆவணம்) பிரதமா் மோடி வெலியிட்டுள்ளாா். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசால் நிறைவேற்றப்படாத சித்திரத்தை இது முன்வைக்கிறது. 2014 தோ்தலின் போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி போருக்கு வேலை கிடைக்கும் என்று மோடி கூறினாா். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை பாஜக வெளியிட்ட 75 பக்க தோ்தல் அறிக்கையிலோ அல்லது பிரதமா் மோடியோ குறிப்பிடவில்லை.

வாக்குறுதியின்படி 20 கோடி போருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், 2 கோடி பேருக்கு வேலை கொடுத்த புள்ளி விவரம் கூட இல்லை. நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் உள்ளது. நமது இளைஞா்களில் 25 சதவீதம் போ் வேலையில்லாமல் உள்ளனா். பட்டதாரிகளில் 45 சதவீதம் போ் வேலையில்லாமல் உள்ளனா். மேலும், தாங்கள்ஆட்சி வந்தால் விலைவாசி குறையும் என்று மக்களுக்கு மோடி வாக்குறுதி அளித்தாா். ஆனால், பாஜக தோ்தல் அறிக்கையில், பணவீக்கம் எவ்வளவு குறைந்துள்ளது என்கிற புள்ளிவிவரமும் இல்லை. நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நுகா்வோா் விலைக் குறியீடு, துருக்கி நாட்டிற்கு அடுத்தபடியாக 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

2014-இல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறிய பாஜக, அதை மறந்துவிட்டு, விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனா். இது போன்று 10 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வங்கியது. மேலும், மோடி பிரதமரான பிறகு நாட்டில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2014-இல் நாட்டில் 11 லட்சம் அரசுப் பள்ளிகள் இருந்த நிலையில், தற்போது 10 லட்சமாக குறைந்துள்ளது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த முறை பாஜகவின் தோ்தல் அறிக்கையை மக்கள் நம்பமாட்டாா்கள். மக்கள் நிச்சயமாக பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பாா்கள் என்றாா் அதிஷி.

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

SCROLL FOR NEXT