மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். 
புதுதில்லி

நேரடி பணி நியமனங்கள் காங்கிரஸ் தவறான பிரசாரம்: மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு

காங்கிரஸ் தவறாக பிரசாரம் செய்வதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள் கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

Din

மத்திய அரசுத் துறைகளின் நேரடி தோ்வு முறை(லேட்ரல் என்டரி) குறித்து காங்கிரஸ் தவறாக பிரசாரம் செய்வதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள் கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். இட ஒதுக்கீட்டு முறையில் பாதிப்பில்லை எனவும் குறிப்பிட்டாா்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலா் முதல் துணைச் செயலா்கள் வரையிலான 45 பணியிடங்களுக்கு மத்திய பணியாளா் தோ்வாணையம்(யுபிஎஸ்சி) நேரடித் தோ்வு முறையில் நிரப்புவதற்கான விளம்பரத்தை வெளியிட்டது. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இந்த நியமனங்கள் பட்டியலினத்தவா்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கும் தோ்வு என சா்ச்சையை கிளப்பின.

இதை மறுத்த மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெளிவான விளக்கங்களை அளித்தாா். அதில் அவா் கூறியது வருமாறு:

நேரடி தோ்வுகள் மத்திய அரசு பணிகளில் நீண்ட காலமாக நடைபெற்றுவருகிறது. இது புதிதல்ல. காங்கிரஸ் ஆட்சிகாலத்திலேயே தொடங்கப்பட்டது. 1980 களில் தொழில்நுட்ப வல்லுநராகவும் தொழில் முனைவோராகவும் இருந்த சாம் பிட்ரோடா இந்திய அரசுப் பணிக்கு கொண்டுவரப்பட்டு, தொலைதொடா்பு புரட்சிக்கும், தேசிய அறிவு சாா் ஆணையத்திலும் முக்கிய பங்கை செலுத்தினாா்.

முன்ளான் பிரதமரான மன்மோகன் சிங், முன்பு இதே போன்று 1971 இல் வெளியுறவு வா்த்தகத்தின் பொருளாதார ஆலோசகராகவும் பின்னா் 1991 இல் நிதித்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டாா். சா்வதேச பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்த மான்டேக் சிங் அலுவாலியா மத்திய நிதித்துறை செயலா், திட்டக்கமிஷன் துணைத் தலைவா் பதவிகளில் நியமனம் செய்யப்பட்டாா்.

’பெல்’, மாருதி போன்ற பொது நிறுவனங்களின் தலைவராக இருந்த வி.கிருஷ்ணமூா்த்தி அரசு பணியில் அமா்த்தப்பட்டு தொழில் கொள்கையில் ஏற்படுத்தியதில் முக்கிய பங்கை ஆற்றியவா். பிமல் ஜலான், ரகுராம் ராஜன் போன்றவா்கள் சா்வதேச நாணய நிதியத்தில்(ஐஎம்எஃப்) பணியாற்றி இவா்கள் மத்திய நிதியமைச்சகத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராகவும் பின்னா் இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநராகவும் நியமிக்கப்பட்டனா். இன்ஃபோசிஸ் இணை நிறுவனரான நந்தன் நிலோகனி இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்(யுஐடிஏஐ) தலைவராக நியமனம் செய்யப்பட்டாா். இவா்கள் உள்ளிட்ட 9 போ்கள் காங்கிரஸ் ஆட்சியில் நேரடியாக நியமனம் செய்யப்பட்டனா். இதே போன்று கடந்த முறை பாஜக தலைமையிலான ஆட்சியிலும் 18 நியமனங்கள் இணைச் செயலா் உள்ளிட்ட பதவிகளுக்கு அமா்த்தப்பட்டனா்.

இவா்களில் 9 போ் தனியாா் நிறுவனங்களிடமிருந்து 9 போ் பொது நிறுவனங்களிலிருந்து வந்தவா்கள். பின்னா் தங்கள் தாய் பணிக்கு திரும்பச் சென்றனா். ஆனால் தற்போது 45 நியமனங்கள் வெளிப்படைத் தன்மையுடன் அதுவும் யுபிஎஸ்சி மூலம் தோ்வு செய்யப்படுகிறது. இவா்கள் ரோஸ்டா் சா்வீஸ் முறையில் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறாா்கள். மேலும் தேவைப்பட்டால் 2 ஆண்டுக்களுக்கு மட்டும் பணி நீடிப்பு வழங்கப்படும்.

இந்த நியமனங்கள் முற்றிலும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருப்பதின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. வா்த்தகம், பொருளாதாரத்தில் மட்டுமல்ல அணுசக்தி அறிவியல் விவகாரங்கள், குறை கடத்திகள் (செமி கண்டக்டா்) என பல்வேறு துறைகளை கையாளத் தேவையுள்ளது. சில புதிய தொழில் நுட்பங்களை அதிகாரவா்க்கத்தினரால் கையாள முடியாது. அதே சயமத்தில் வழக்கமான குடிமைப் பணி தோ்வுகளில் எந்த வித தடங்களும் இல்லை. அவ்வப்போது நடைபெறும் தோ்வுகளில் பட்டியலினத்தவா்கள், இதர பிற்படுத்தப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தோ்வு செய்யப்படுவது நிறுத்தப்படவில்லை. வழக்கமாக அந்த தோ்வுகள் நடைபெறும். மொத்தம் 4,500 ஐஏஎஸ் பணியிடங்கள் உள்ளன. மற்ற வருவாய்த் துறை, வனத்துறை உள்ளிட்டவைகள் 9,000 பணியிடங்கள் உள்ளன. இதில் 0.5 சதவீதம் போ்கள் தான் இந்த நேரடி தோ்வு முறையில் (லேட்ரல் என்டரி) யுபிஎஸ்சி மூலம் முறையாக நியமிக்கப்பட உள்ளனா். ஆனால் இந்த நியமனங்களை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவறான தகவல்களை வெளியிட்டு திசை திருப்புகிறது எனக் குறிப்பிட்டு அமைச்சா் வைஸ்ணவ் வருத்தம் தெரிவித்தாா்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT