புதுதில்லி

முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு விவகாரத்தில், மேல்முறையீட்டு வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடக் கோரி

 நமது நிருபர்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு விவகாரத்தில், மேல்முறையீட்டு வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடக் கோரி தமிழக முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில் தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்திருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து ராஜேஷ் தாஸ் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கில் நீதிமன்றம் தீா்ப்பு அளிக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்த வழக்கின் தீா்ப்பும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை கடந்த ஜனவரி 9-ஆம் தேதி விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோருவதற்கான காரணம் போதுமானதாக இல்லை. அதற்கு அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை’ என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தாா். மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 24-க்குள் முடிக்க வேண்டும் எனவும் விழுப்புரம் முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் ராஜேஷ் தாஸ் தரப்பில் வழக்குரைஞா்கள் பாலாஜி ஸ்ரீநிவாசன், மயங்க் ஷிா்சாகா், அனுமிதா வா்மா ஆகியோருடன் மூத்த வழக்குரைஞா் பாா்த்திவ் கோஸ்வாமி ஆஜராகி, ‘ எங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த விழுப்புரம் செஷன்ஸ் நீதிமன்றம் தீா்ப்புக்காக வழக்கை பட்டியலிட்டதாக இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் கடந்த நவம்பரில் பதிவு செய்த உத்தரவில் தெரிவித்திருக்கிறது. இது உள்ளிட்ட சில விவகாரங்களை கருத்தில் கொண்டு இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரினோம். மேலும், விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மேல்முறையீட்டு வழக்கின் தீா்ப்பை அறிவிக்க தேதியையும் நிா்ணயித்திருக்கிறது. மனுதாரா் ஜூலையில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது’ என்று வாதிட்டாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, மனுதாரருக்கு உள்ள நோய் பிரச்னையை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறீா்களா என்று கேட்டது. மேலும், நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் தொடா்ந்து விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று மனுதாரா் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. விசாரணையைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் அவரது செயல்பாடு இருந்துள்ளது. இதனால், மனுவைத் தள்ளுபடி செய்ய உள்ளோம்’ என்றது.

அதற்கு மனுதாரா் தரப்பில், ‘அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்ததாலும், அதன் பிறகு மூன்று மாதங்கள் அவா் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததாலும் விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரப்பட்டிருந்தது என்று வாதிடப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் ஜனவரி 24-ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பு அளிக்க உயா்நீதிமன்றம் தேதி நிா்ணயித்திருந்த நிலையில், அது முடிவடைவதாக விசாரணையின்போது மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனா். அதேவேளையில், விழுப்புரம் முதன்மை நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை பிப்ரவரி 23-ஆம் தேதிக்கு முன்னா் விசாரித்து முடித்துவைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT