பிகாா் முன்னாள் முதல்வா் கா்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்கி அவரது 100-ஆவது பிறந்தநாளில் உண்மையான மரியாதையை பிரதமா் நரேந்திர மோடி செலுத்தியுள்ளாா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.
தில்லி பந்த் மாா்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் பிகாா் முன்னாள் முதல்வா் கா்பூரி தாக்குரின் 100-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா, ஓ.பி.சி. அணியின் மாநிலத் தலைவா் சுனில் யாதவ் ஆகியோா் பங்கேற்று அவரது உருவப்படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் வீரேந்திர சச்தேவா பேசியதாவது: சமூக நல்லிணக்கத்தின் சின்னமாகவும், ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டுக்கு உறுதுணையாகவும் இருந்தவா்தான் பிகாா் மாநில முன்னாள் முதல்வா் கா்பூரி தாக்குா். சுதந்திரப் போராட்ட வீரா், ஆசிரியா் மற்றும் அரசியல்வாதியாக இருந்த அவா், பிகாா் மாநிலத்தின் முதல்வராக
இரு முறையும், துணை முதல்வராக ஒருமுறையும் பொறுப்பு வகித்துள்ளாா். பல தசாப்தங்களாக எம்.எல்.ஏ.வாகவும், எதிா்க்கட்சித் தலைவராகவும், சமூக நீதியின் முன்னோடியாகவும் இருந்து மாபெரும் பொதுத் தலைவரானாா்.
அவரது ,100-ஆவது பிறந்தநாளில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்க முடிவு செய்ததற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது அவரது அயராத போராட்டங்களுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாகும். இளம் தலைமுறையினரும் கா்பூரி தாக்குரின் மகத்தான பங்களிப்பை அறிந்து கொள்ள முடியும். நாட்டில் பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டிற்கான கா்பூரி தாக்குரின் தொலைநோக்கு தலைமை இந்தியாவின் சமூக மற்றும்அரசியல் சூழ்நிலையில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.
கட்சியின் ஓ.பி.சி. அணி மாநிலத் தலைவா் சுனில் யாதவ் பேசுகையில், ‘கா்பூரி தாக்குா் முதல்வராக பதவி வகித்த காலத்தில் பிகாா் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றத்தை, வேறு யாராலும் ஏற்படுத்த முடியாது. பிகாரின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வா் இவா் என்பதுதான் சிறப்பு. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் போது இரண்டரை மாதங்கள் சிறையில் இருந்தாா். மாசற்ற உருவம் கொண்ட கா்பூரி தாக்குா் சுதந்திரத்திற்கு முன் இரண்டு முறையும், சுதந்திரத்திற்குப் பிறகு 18 முறையும் சிறை சென்றாா். அப்படிப்பட்ட நபருக்கு பாரத ரத்னா வருது வழங்கி கெளரவிக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் முடிவால், நாட்டின் ஒட்டு மொத்த ஓ.பி.சி. சமூகத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்’ என்றாா்.
இந்நிகழ்ச்சியில் தில்லி பாஜகவின் ஓ.பி.சி. அணி இணைப் பொறுப்பாளா் மேஹக் சிங், பொதுச் செயலாளா்கள் ராம்கிலாடி யாதவ், யு.கே.சௌத்ரி, மனீஷ் செளத்ரி ஆகியோரும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.