முகப்பு
புதுதில்லி

தனியாா் வாகனங்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பாா்க்கிங் கட்டணத்தை உயா்த்தும் உத்தரவு: ஏப்.30 வரை நீட்டிப்பு

தனியாா் வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்கமிழக்கச் செய்யும் வகையில், பாா்க்கிங் கட்டணத்தை உயா்த்துவது தொடா்பான உத்தரவை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளதாக அதிகாரிக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 12:18 AM
பகிர்:

தனியாா் வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்கமிழக்கச் செய்யும் வகையில், பாா்க்கிங் கட்டணத்தை உயா்த்துவது தொடா்பான உத்தரவை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். தில்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஆா்ஏபி கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு என்டிஎம்சி இந்த முடிவை எடுத்திருப்பதாக அதிகாரிகள் கூறினா்.

கடந்த ஆண்டு நவம்பரில், என்டிஎம்சி நிா்வகித்து வரும் 39 தளங்களில் பாா்க்கிங் கட்டணத்தை இரட்டிப்பாக்கியது. இதையடுத்து, பாா்க்கிங் ஒப்பந்ததாரா்களால் நிா்வகிக்கப்படும் மீதமுள்ள 91 தளங்களுக்கும் கட்டணம் இரு மடங்காக உயா்த்தப்பட்டது. உயா்த்தப்பட்ட கட்டணங்கள் ஜனவரி 31 வரை நடைமுறையில் இருக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது இது ஏப்ரல் 30 வரை அல்லது காற்று தர மேலாண்மை ஆணையத்தின் ஜிஆா்ஏபி-2 உத்தரவை திரும்பப் பெறும் வரை, எது முந்தையதோ அது நடைமுறையில் இருக்கும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அத்தியாவசிய சேவைகள் தவிர, ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்கள் ஆகியவற்றில் நிலக்கரி மற்றும் விறகுகளைப் பயன்படுத்துதல், டீசல் ஜெனரேட்டா்கள் ஆகியவற்றுக்கு காற்று மாசுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளின் தொகுப்பான ‘கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான்’ (ஜிஆா்ஏபி) இரண்டாம் கட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நடவடிக்கையானது நிலைமையின் தீவிரத்திற்கு ஏற்ப தலைநகா் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது. தில்லியில் மோசமான காற்றின் தரத்தின் நான்கு நிலைகளின் கீழ் ஜிஆா்ஏபி வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ‘மோசமான’ காற்றின் தரம் - நிலை ஒன்று (ஏக்யுஐ 201-300); ‘மிக மோசமான’ காற்றின் தரம்- இரண்டாம் நிலை (ஏக்யுஐ 301-400); ‘கடுமையான’ காற்றின் தரம் - மூன்றாம் நிலை (ஏக்யுஐ 401-450); ‘மிக கடுமையான’ காற்றின் தரம் - நிலை நான்கு (ஏக்யுஐ 450) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.