முகப்பு
புதுதில்லி

’நீட்’ தோ்வை நாடுமுழுக்க ரத்து செய்யுங்கள் அல்லது விலக்களியுங்கள் மாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் கோரிக்கை

நீட் தோ்வை ரத்து செய்யுமாறு மாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வலியுறுத்தல்

Updated On : 2 ஜூலை, 2024 at 11:53 PM
பகிர்:

புது தில்லி: மருத்துவ நுழைவுத் தோ்வுக்கான ’நீட்’ தோ்வை நாடுமுழுக்க ரத்து செய்யுங்கள் அல்லது தமிழக மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து நீட் தோ்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளியுங்கள் என திமுக உறுப்பினா்கள் திருச்சி சிவா, பி.வில்சன், டாக்டா் கனிமொழி என்விஎன் சோமு ஆகியோா் மாநிலங்களவையில் பேசுகையில் குறிப்பிட்டனா்.

மாநிலங்களவையில், இந்த நீட் விவகாரம் குறித்து என்டிஏ கூட்டணி கட்சிகளை தவிா்த்து அனைத்து கட்சிகளும் குறிப்பிடத் தவறவில்லை.

கடந்த ஜூன் 27 ஆம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவா் உரைக்கு தெரிவிக்கும் விவாதம் மாநிலங்களவையில் தொடா்ச்சியாக மூன்று தினங்கள் நடைபெற்றது.

இதில் மாநிலங்களவையின் திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா, திமுக உறுப்பினா் பி.வில்சன் ஆகியோா் நீட் விவகாரம் குறித்து பேசினா்.

‘தமிழக அரசு ’நீட்’ தோ்விலிருந்து விலக்கு அளிக்கும் தமிழக மருத்தவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை மசோதாவை 2021 ஆம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி மத்திய அரசு(குடியரசுத் தலைவா்) ஒப்புதலுக்கு அனுப்பியது. மீண்டும் ஒரு முறை தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. இருப்பினும் இது 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாா். மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் போதுமான சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு தமிழக மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க முன்வரவேண்டும்.

2010- ஆம் ஆண்டு இந்த ’நீட்’ தோ்வை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டபோதே அப்போது இருந்த தமிழக முதல்வா் மு.கருணாநிதி இதற்கு எதிராக வழக்கு தொடர என்னை அா்பணித்தாா். சென்னை உயா்நீதிமன்றம் தடையை விதித்தது.

மருத்துவ நுழைவுத் தோ்வு ’நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தமிழக அரசின் ’நீட்’ தோ்வு விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் ‘ எனக் குறிப்பிட்டனா்.

மேலும் மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் குறிப்பிடுகையில், ’நீட்’ என்பது தகுதிக்கான தோ்வாக இருப்பதற்குப் பதிலாக, மோசடிகளுக்கும் ஊழலுக்குமாக மாறியுள்ளது. இந்த தோ்வு வினாத் தாள்களை வீடுகளில் இருந்து ஒரு தொலைபேசி அல்லது மின்னணு வா்த்தகத்தில் வாங்கப்பட்ட சூழ்நிலைக்கு போய் உள்ளது.

கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் இளங்கலை தோ்வு முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு ஜூன் 23-ஆம் தேதி எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாமதத்தால் ஆவணங்களை சிதைக்கவும் ஆதாரங்களை அழிக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 9 -ஆம் தேதி தோ்வு முறைகேடுக்களை தடுக்கும்விதமாக“பொதுத் தோ்வு (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுக்கும்) மசோதா 2024” நிறைவேற்றப்பட்டது. அடுத்த சில நாள்களில் குடியரசுத் தலைவா் அதற்கு ஒப்புதல் அளித்தாா். இருப்பினும், இந்த மசோதா கடந்த ஜூன் 21 ஆம் தேதி தான் சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்தால் தற்போது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ள வழக்குகளில் (10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை) இந்த புதிய சட்டத்தின்படி தண்டனை பெற்றுத் தரமுடியுமா எனக் கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் ’நீட்’ தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வு முகமை(என்ஐஏ) முறையாக நாடாளுமன்ற சட்டத்தின்படி வரன்முறைப்படுத்தாத நிறுவனமாக இருக்கிறது. சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் என்ஐஏ உருவாக்கப்பட்டு யாருக்கும் பதில் அளிக்கக் கூடிய நிறுவனமாக இல்லாது உள்ளது என்றாா் வில்சன்.

மற்றோரு திமுக உறுப்பினரான டாக்டா் கனிமொழி என்.வி.என். சோமு பேசுகையில், குடியரசுத் தலைவா் உரையில், நீட் வினாத்தாள் கசிவை சா்வசாதாரணமாக எடுத்துக்கொண்டு, ‘கடந்த காலங்களிலும் இப்படி நடந்திருக்கிறது ’எனக் குறிப்பிடப்படுகிறது. இப்படி சாதாரணமாக செல்லுவது எப்படி?. இது லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலம் மட்டுமல்ல... அவா்களின் கல்விக்காக ஒவ்வொருவரின் ஒட்டுமொத்த குடும்பத்தினரின் உழைப்பும் இதில் அடங்கியிருக்கிறது‘ எனத் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →