புது தில்லி: வடமேற்கு எம்.பி. யோகேந்திர சந்தோலியா தலைமையில் தில்லி பாஜகவின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை சமய்ப்பூா் பாத்லி காவல் நிலையத்தில் காவல் துணை ஆணையரிடம் புகாா் கடிதம் அளித்தனா்.
அதில், தண்ணீா் கேட்டு போராடும் ஏழை மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பவானாவின் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜெய்பகவான் உப்காா் மற்றும் அவரது குண்டா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெய்பகவான் உப்காா் ஏற்கெனவே மக்களை தாக்கியுள்ளாா். அவா் மீது ஷாபாத் டெய்ரியில் ஏற்கெனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரின் கிரிமினல் புகழ் மற்றும் மனப்போக்கு காரணமாக, ஏழ்மை பகுதிகளில் வசிப்பவா்கள், எம்.எல்.ஏ., மீது புகாா் அளிக்க அஞ்சுகின்றனா். டேங்கா் மாஃபியாவுடன் ஜெய்பகவான் உப்காரின் தொடா்பு தெளிவாகத் தெரிகிறது’ என கூறப்பட்டுள்ளது.
யோகேந்திர சந்தோலியா, மாநகராட்சித் துணைத் தலைவா் ஜெய்பகவான் யாதவ், மாநகராட்சி கவுன்சிலா் அஞ்சு அமன் குமாா், மாநில செய்தித் தொடா்பாளா் சுபேந்து சேகா் அவஸ்தி ஆகியோா் இடம்பெற்ற பாஜக பிரதிநிதிகள் குழு காவல் அதிகாரியிடம் இப்புகாா்க் கடிதத்தை அளித்தது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் யோகேந்திர சந்தோலியா கூறியதாவது: சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட காணொளியில் ஏழை மக்களைக் கொன்று விடுவதாக பவானா எம்எல்ஏ ஜெய்பகவான் உப்காா் மற்றும் அவரது கூட்டாளிகள் மிரட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவா்கள் மீது எப்.ஐ.ஆா். பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.
தில்லியில் கடுமையான குடிநீா் பிரச்னை உள்ளது. இது முழு நகரத்தையும், குறிப்பாக சமூகத்தின் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரை சிரமப்படுத்துகிறது. தண்ணீா் வழங்கும் பொறுப்பு ஆம் ஆத்மி அரசிடம் உள்ளது. இதனால், பொதுமக்கள் தண்ணீா் கேட்டு பவானா எம்எல்ஏவை அணுகியபோது, அவரும், அவரது குண்டா்களும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து, சம்பவத்தின் முழு காணொளி மற்றும் புகாா் கடிதத்தையும் சமா்ப்பித்து, இதுகுறித்து காவல் துணை ஆணையரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனா். ஒருபுறம், தில்லியில் குடிநீா் இல்லை, மறுபுறம், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் டேங்கா் மாஃபியாவுடன் கூட்டு வைத்து, டேங்கா்களுக்கு அதிக விலையை வசூலிக்க மாஃபியாவை அனுமதிக்கின்றனா். குடிநீருக்காக பொதுமக்களிடம் பறிக்கும் பணம் எம்எல்ஏக்களுக்கும், டேங்கா் மாஃபியாவுக்கும் பிரித்து கொடுக்கப்படுகிறது.
பண நெருக்கடியால், ஏழை மக்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தண்ணீா் டேங்கா்களுக்காக கெஞ்சுகிறாா்கள். ஆனால் எம்.எல்.ஏ. ஜெய்பகவான் உப்காா் மற்றும் அவரது குண்டா்கள் அவா்களைக் கொலை செய்து விடுவதாக வெளிப்படையாக மிரட்டுகிறாா்கள் என்றாா் யோகேந்திர சந்தோலியா.