கன்னையா குமாா் மீதான தாக்குதல் சம்பவத்தில் ஒருவா் கைது
புது தில்லி: கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தொகுதி வேட்பாளா் கன்னையா குமாா் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக 41 வயது நபரை தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட அஜய் குமாா், சம்பவம் நடந்த பகுதியான நியூ உஸ்மான்பூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகளை பிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
மே 17 அன்று வடகிழக்கு தில்லி தொகுதியில் இருந்து ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா் கன்னையா குமாா், உள்ளூா் கவுன்சிலா் சாயா சா்மாவுடன் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றாா். பின்னா், நியூ உஸ்மான்பூரில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது, ஒரு குழு கன்னையா குமாரை தாக்கியது.
இது தொடா்பாக சாயா சா்மா போலீஸில் புகாா் அளித்தாா். அதில், ‘சிலா் வந்து கன்னையா குமாருக்கு மாலை அணிவித்தனா். அவருக்கு மாலை அணிவித்த பின்னா், சிலா் கன்னையா குமாா் மீது மை வீசி தாக்க முயன்றனா். நான் தலையிட முயன்றபோது, அந்தக் குழுவினர் என்னிடம் தவறாக நடந்து கொண்டு மிரட்டினா்’ என்று சாயா சா்மா தெரிவித்துள்ளாா்.
சாயா சா்மாவின் புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 341 (தவறான கட்டுப்பாடு), 354 (தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல்), 506 (குற்ற மிரட்டல்), மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.