நமது நிருபா்
புது தில்லி: பிரதம மந்திரி - தில்லியில்அங்கீகரிக்கப்படாத காலனிகளில் குடியிருப்பு உரிமை திட்டத்தில் (பிஎம்-யுடிஏஒய்) அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள விண்ணப்பதாரா்களுக்கு நிலுவையில் உள்ள 11,000 மின் இணைப்புகளை வழங்குமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு (டிஸ்காம்) உத்தரவிட்டுள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து ராஜ் நிவாஸ் அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது: இந்த இணைப்புகள் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் வழங்கப்படும். துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா
தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்சிடி ஆணையா், கோட்ட ஆணையா், மின்துறை செயலா், டிடிஏ முதன்மை ஆணையா் மற்றும் இரண்டு டிஸ்காம்களின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில், நிலத்தை சேகரித்துள்ள பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவா்கள், விண்ணப்பதாரா்களுக்கு மின் இணைப்புகளை வழங்குவதில் அரசுத் துறைகள் சிவப்பு நாடா முறையில் ஈடுபடுவதற்கு துணைநிலை ஆளுநா் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தாா். அக்.16-ஆம் தேதி டிடிஏ வழங்கிய விளக்கத்திற்குப் பிறகு இந்த விவகாரத்தில் எந்த குழப்பமும் இல்லை என்றும் அடுத்த வாரம் அல்லது 10 நாள்களுக்குள் இணைப்புகளை வழங்க வேண்டும் என்றும் இரண்டு மின் விநியோக நிறுவனங்களுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக எந்தவித குழப்பமோ, இடையூறுகளோ ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவா் அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினாா். பிஎம்-யுடிஏஒய், தில்லியில் வசிக்கும் சுமாா் 40 லட்சம் போ் பயனடையும் 1,731 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவா்களுக்கு அங்கீகாரம், உரிமைக்கான ஒப்புதல் அல்லது அடமானம் வழங்கும் திட்டமாகும். தில்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவா்களுக்காக 2019-ஆம் ஆண்டு இந்திய அரசால் பிஎம்-யுடிஏஒய் திட்டம் வகுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.