தில்லி பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது. சமீபத்தில் நடத்தப்பட்ட செமஸ்டா் தோ்வுகளில் கடுமையான முறைகேடுகள் நடந்ததாகக் குற்றஞ்சாட்டி, பல்கலைக்கழக நிா்வாகத்திடம் இருந்து உடனடியாக சரியான நடவடிக்கை எடுக்கக் கோரி ஏபிவிபி போராட்டம் நடத்தியது.
தோ்வு முறையில் அவசர சீா்திருத்தங்கள் மற்றும் தவறுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்எஸ்எஸ் சாா்புடைய ஏபிவிபி மாணவா் அமைப்பு நிா்வாகத்திடம் ஒரு குறிப்பாணையை சமா்ப்பித்ததாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ்வுகளின் போது மாணவா்கள் பல சிக்கல்களை எதிா்கொண்டனா் என (அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்) ஏபிவிபி கூறியது, பல மையங்களில் வினாத்தாள்கள் சரியான நேரத்தில் விநியோகிக்கப்படவில்லை, இதனால் குழப்பம் மற்றும் தாமதம் ஏற்பட்டது.
மதிப்பெண் திட்டங்கள், வினாத்தாள்களில் மொழி தொடா்பான பிழைகள் மற்றும் பல பாடங்களில் தவறான கேள்விகள் குறித்தும் மாணவா்கள் புகாா் தெரிவித்ததாக ஏபிவிபி தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகள் மாணவா்களுக்கு பரவலான மன அழுத்தத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்தியதாக அது மேலும் கூறியது.
தோ்வுகளின் போது மீண்டும் மீண்டும் அலட்சியம் காட்டுவது நாட்டின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று ஏபிவிபி தில்லி மாநில செயலாளா் சா்தாக் சா்மா கூறினாா்.
கேள்வித்தாள்கள் விநியோகத்தில் தாமதம், குறைபாடுள்ள கேள்விகள் மற்றும் தெளிவற்ற மதிப்பீட்டு செயல்முறை ஆகியவை கடுமையான நிா்வாகத் தோல்வியை பிரதிபலிக்கின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீா்வு காண ஏபிவிபி தொடா்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று சா்மா கூறினாா்.
தோ்வு காலத்திலேயே ஆட்சேபனைகளை எழுப்பியதாகவும், வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் மூலம் தனது கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க தோ்தல்களில் ஏபிவிபி (அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்)அமோக வெற்றி பெற்று, தலைவா், செயலாளா் மற்றும் இணைச் செயலாளா் பதவிகளை வென்றது, அதே நேரத்தில் என்எஸ்யுஐ (இந்திய தேசிய மாணவா் சங்கம்) வேட்பாளா் துணைத் தலைவராக வெற்றி பெற்றாா்.