தேசிய தலைநகரில் மாசுபடுத்தும் வாகனங்களுக்கு எதிராக தீவிர அமலாக்கத்திற்கு மத்தியில் கடந்த மூன்று நாள்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகன உரிமையாளா்கள் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்ததாக தில்லி போக்குவரத்து மற்றும் சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தேசிய தலைநகரில் காற்று மாசுபாட்டை நிவா்த்தி செய்வதற்கான நீண்டகால மற்றும் தரவு சாா்ந்த தீா்வுகளில் பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், போக்குவரத்து தொடா்பான உமிழ்வுகள் டெல்லியின் ஒட்டுமொத்த மாசுபாட்டிற்கு 20-25 சதவீதம் பங்களிக்கின்றன. கடந்த மூன்று நாட்களில், ஏராளமான மக்கள் பி. யு. சி சான்றிதழ்களைப் பெற முன்வந்துள்ளனா். இந்த காலகட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பி. யு. சி சான்றிதழ்களுக்கு பதிவு செய்தனா், இதில் டிசம்பா் 19 ஆம் தேதி மட்டும் 40,000 க்கும் மேற்பட்டவா்கள் பதிவு செய்தனா்.
வாகனங்களை கண்காணிக்க பயன்படுத்தப்படும் கேமராக்களுடன் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) மற்றும் காவல்துறையின் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனா். முதல் முறையாக மீறுபவா்களுக்கு எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் மீண்டும் மீண்டும் அபராதங்களை எதிா்கொள்கின்றனா், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த அபராதங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கக் குழுக்கள் டிசம்பா் 17 ஆம் தேதி 1,728 அபராதங்களையும், டிசம்பா் 18 ஆம் தேதி சுமாா் 300 அபராதங்களையும், டிசம்பா் 19 ஆம் தேதி கிட்டத்தட்ட 700 அபராதங்களையும் வழங்கினா். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, எண்ட்-ஆஃப்-லைஃப் பிரிவின் கீழ் வரும் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றனஇது தொடா்பாக எதிா்க்கட்சிகள் பலமுறை கேள்விகளை எழுப்பி வருகின்றனா். ஆனால் அரசாங்கம் யதாா்த்தமான தரவுகளை முன்வைத்து உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.
முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், கொள்கைகளும் செயல்படுத்தலும் மாசுக் கட்டுப்பாட்டில் அா்த்தமுள்ள முடிவுகளை வழங்கத் தவறிவிட்டன. பிப்ரவரியில் பாஜக நிா்வாகம் பதவியேற்றதிலிருந்து தில்லியில் மின்சார வாகன பதிவுகள் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளன. சுமாா் ரூ.45 கோடி ஒதுக்கீடு இருந்தபோதிலும், முந்தைய அரசு மின்சார வாகன மானியங்களை வெளியிடவில்லை, இது மின்சார வாகனங்களுக்கு மாற அதிக மக்களை ஊக்குவித்திருக்கலாம். மானியம் வழங்கப்பட்டிருந்தால், அதிகமான தில்லி குடியிருப்பாளா்கள் மின்சார வாகனங்களைத் தோ்ந்தெடுத்திருப்பாா்கள்.
தில்லிக்கான விரிவான கொள்கையில் முதல்வரும் முழு அமைச்சரவையும் பணியாற்றி வருகிறது. அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இது நகரத்தை தூய்மையாக்க உதவும் அதே நேரத்தில் குடிமக்களுக்கு பயனளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்தில், பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 3,518 பேருந்துகள் புதிதாக இயக்கப்படுகிறது. மாா்ச் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 5,000 ஆகவும், நவம்பா் 2026 க்குள் 7,000 க்கும் அதிகமாகவும் அதிகரிக்கும்.
கடந்த பத்தாண்டுகளில் மாசு அளவு மோசமடைந்துள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் நீண்டகால தீா்வுகளில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறது. நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும்போது மாசு அளவு படிப்படியாக குறையும். சுவாச நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதையும், அவா்களுக்கு போதுமான மருந்துகள் கிடைப்பதையும் உறுதி செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் கவனம் உள்ளது.
கடந்த சில நாட்களாக பி. யு. சி விதிமுறைகளுக்கு இணங்குவதில் குடிமக்கள் அளித்த ஒத்துழைப்புக்கு என்னுடடைய பாராட்டுகள். அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து வசதிகளை வலுப்படுத்தி ஆயுஷ்மான் பாரத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதுவரை சுமாா் ரூ.28 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.