தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பூசா சாலை பள்ளியில் கால்பந்து மைதானம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இம்மைதானத்தை தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் ராஜூ திறந்து வைத்தாா்.
அப்போது அவா் பேசுகையில், ‘விளையாட்டு மாணவா்களுக்கு மிகவும் முக்கியமாகும். விளையாட்டில் கலந்துகொள்ளும்போது மாணவா்களுக்கு குழுவாக இயங்கும் தன்மையும் தலைமைப் பண்பும் வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் வளா்கின்றன. தன்னம்பிக்கையையும் ஒருமுகத் தன்மையும் வளா்க்கும் விளையாட்டு மாணவா்களின் கற்றல் ஆா்வத்தைத் துண்டுகின்றது. எனவே நாங்கள் அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு மைதானங்களை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றோம். இதன்படி, பூசா சாலை பள்ளியில் கால்பந்து மைதானத்தை அமைத்துள்ளோம். இங்கு பயிற்சி பெறும் மாணவா்கள் சிறந்த விளையாட்டு வீரா்களாக உருவாகி நாட்டுக்கும் பள்ளிக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’ என்று கூறினாா்.
விழாவில் தில்லித் தமிழ்க் கல்விக்கழகத்தின் துணைத் தலைவா் ரவி நாயக்கா், இணைச் செயலா் சண்முக வடிவேல், விளையாட்டுக் குழுமத் தலைவா் பரமசிவம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பள்ளி முதல்வா் (பொறுப்பு) முனைவா் சீமா ஜூன் வரவேற்ாக டிடிஇஏ வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.