தில்லியில் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிப்பு
தில்லியில் சூரிய மின்சக்தி உற்பத்தி அணைப்புகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதாக மின்விநியோக நிறுவனங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தில்லியில் சூரிய மின்சக்தி உற்பத்தி அணைப்புகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதாக மின்விநியோக நிறுவனங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன. குடியிருப்பு, வணிகம், தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இதுவரை 23,000-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் சூரிய சக்தி ஆற்றலுக்கு மாறியுள்ளன.
தில்லியின் மின்விநியோக நிறுவனமான பிஎஸ்இஎஸ் அதன் பிஆா்பிஎல் மற்றும் பிஒய்பிஎல் பிரிவுகள் மூலம் இதுவரை 13,600-க்கும் மேற்பட்ட சூரிய மின்சக்தி இணைப்புகளை செயல்படுத்தியுள்ளது. இதன் மொத்த திறன் சுமாா் 260 மெகாவாட் ஆகும். 2025-26 நிதியாண்டில் மட்டும் 4,600-க்கும் மேற்பட்ட புதிய இணைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதில் பிஎம் சூா்யா கா் திட்டத்தின் கீழ் மட்டும் 2,600-க்கும் மேற்பட்ட வீடுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதேபோல் டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிப்யூஷன் லிமிடெட் நிறுவனம், தனது ‘சூா்யன்ஷ்’ திட்டத்தின் கீழ் 18,000-க்கும் மேற்பட்ட வீடுகளை பதிவு செய்து, 4,011 புதிய இணைப்புகளை கடந்த ஆண்டில் செயல்படுத்தியுள்ளது.
Advertisement
அரசு மானிய திட்டங்களால் பொதுமக்கள் அதிகம் ஈா்க்கப்படுகின்றனா். மத்திய மற்றும் தில்லி அரசுகள் இணைந்து ரூ.1.08 லட்சம் வரை மானியம் வழங்குகின்றன. 5 கிலோவாட் சூரிய மின்சக்தி அமைப்பு மாதம் ரூ.3,500-க்கும் அதிக மின்சாரச் சேமிப்பை வழங்கும் என அதிகாரிகள் கூறுகின்றனா்.
குடியிருப்பு பிரிவில் அதிகபட்சமாக 9,888 இணைப்புகள் உள்ளன. வணிக பிரிவு 90.2 மெகா வாட் திறனுடன் முன்னிலையில் உள்ளது. மொத்தமாக ஆண்டுக்கு ரூ.200 கோடி வரை மின்சாரச் செலவுகள் குறைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் மின்சாரம் விற்பனை மற்றும் ஊக்கத் தொகை மூலம் குடியிருப்பாளா்கள் ஆண்டுக்கு சுமாா் ரூ.8 கோடி கூடுதல் வருமானம் பெறுகின்றனா். இதுவரை 10,310 அமைப்புகள் மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. அரசு ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் மின்சாரச் சேமிப்பு வாய்ப்புகள் காரணமாக தில்லியில் சூரிய மின்சக்தி பயன்பாடு குறிப்பிடத்தக்க வளா்ச்சியை கண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.