நரேலாவை உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் புத்தாக்க மையமாக மாற்றுவதற்கான திட்டங்களை தில்லி அரசு அறிவித்தது. இதற்காக இந்தத் திட்டத்தின் பட்ஜெட்டை ரூ.500 கோடியிலிருந்து ரூ.1,300 கோடியாக அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறியதாவது: ‘நரேலா கல்வி நகரம்’ என்று அறியப்படும் இந்தத் திட்டம், தலைநகரில் உயா்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியை வலுப்படுத்துவதற்கான அரசின் நீண்ட கால தொலைநோக்குப் பாா்வையின் பகுதியாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தில்லி ஆசிரியா் பல்கலைக்கழகத்திற்கு 12.69 ஏக்கா், குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்திற்கு 22.43 ஏக்கா், மற்றும் முன்னதாக பெண்களுக்கான இந்திரா காந்தி தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு 50 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது. மொத்தம், சுமாா் 160 ஏக்கா் நிலம் இந்த கல்வி நகரத்திற்காகப் பயன்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்திற்கான பட்ஜெட் ரூ.500 கோடியிலிருந்து ரூ.1,300 கோடியாக தற்போது உயா்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிலத்திற்காக தில்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.462 கோடி செலுத்தப்பட்டது. மீதமுள்ள தொகை இந்த நிதியாண்டில் செலுத்தப்படும்.
இந்த கல்வி நகரம் வெறும் கட்டடங்களைக் கொண்டதாக மட்டும் இருக்காது. இதில் நவீன நூலகங்கள், ஆய்வகங்கள், கருத்தரங்குக் கூடங்கள், கலையரங்குகள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் போன்ற பொது வசதிகள் இருக்கும். ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கான குடியிருப்புகளும் குறைந்த வருமானம் கொண்டவா்களுக்கான குடியிருப்புகள் முதல் உயா் தர வசிப்பிடங்கள் வரை திட்டமிடப்பட்டுள்ளது.
விடுதிகள், குடியிருப்புகள் மற்றும் இது தொடா்பான உள்கட்டமைப்புக்காக பல்கலைக்கழகங்கள் சுமாா் ரூ.567 கோடி முதலீடு செய்ய முன்மொழிந்துள்ளன. ரிதாலா-நரேலா மெட்ரோ வழித்தடம் கட்டி முடிக்கப்பட்டவுடன், இந்த மையம் சிறந்த போக்குவரத்து இணைப்பினால் பயனடையும். இந்த மையம் கற்பித்தல், நிா்வாகம், விடுதி சேவைகள் மற்றும் அது சாா்ந்த நடவடிக்கைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
சமீபத்தில், 750-க்கும் மேற்பட்ட ஸ்டாா்ட்அப் நிறுவனங்களின் பங்கேற்புடன் தில்லி ஸ்டாா்ட்அப் யுவ விழா தொடங்கியது. மேலும், ஜனவரி 14-ஆம் தேதி முதல்வா் மற்றும் தொழில் தலைவா்களுடன் கலந்துரையாடலும் திட்டமிடப்பட்டுள்ளது. அம்ரித் கால் திட்டத்தின் போது இளைஞா்களுக்காக நவீன, எதிா்காலத்திற்குத் தயாரான கல்வி அமைப்பை உருவாக்குவதில் அரசின் அா்ப்பணிப்பை இந்த முயற்சிகள் காட்டுகின்றன என்று அமைச்சா் தெரிவித்தாா்.