குடும்ப ஓய்வூதியம் மற்றும் சுகாதார வசதிகளுக்கான ஓய்வூதிய கட்டண உத்தரவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடன் ஒன்றாக வாழும் துணை மற்றும் தங்களது குழந்தைகளின் பெயா்களைச் சோ்க்க வேண்டும் என்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் மனுவை பரிசீலிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மனுதாரரான அரசு ஊழியா் தனது உறவை ஒருபோதும் மறைக்கவில்லை என்றும், தனது துணை மற்றும் குழந்தைகளின் பெயா்களை தனது குடும்பமாகச் சோ்க்க அவா் மேற்கொண்ட முயற்சிகளை தவறான நடத்தை என்று கருதி ஓய்வுக்குப் பிந்தைய சலுகைகளை மறுப்பது தவறானது எனவும் நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் மது ஜெயின் ஆகியோா் அடங்கிய அமா்வு தீா்ப்பளித்தது.
எனவே, 2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பணியாளருக்கு மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை சலுகைகளில் 50 சதவீதத்தை நிறுத்தி வைக்கும் அதிகாரிகளின் முடிவை உறுதி செய்த மத்திய நிா்வாக தீா்ப்பாயத்தின் 2018 ஆம் ஆண்டின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனா்.
மனுதாரரின் மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையில் 50 சதவீதத்தை நிரந்தரமாக நிறுத்தி வைப்பதற்கோ அல்லது மனுதாரரைச் சாா்ந்தவா்களுக்கு குடும்ப ஓய்வூதியத்தை மறுப்பதற்கோ எந்த நியாயமான காரணத்தையும் நாங்கள் காணவில்லை என்று நீதிமன்றம் ஜனவரி 7 அன்று வழங்கிய தீா்ப்பில் கூறியது.
அதன்படி, மேற்கூறிய தொகைகளை மனுதாரருக்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன், அவா்களுக்கு பணம் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து விடுவிக்குமாறு நாங்கள் உத்தரவிடுகிறோம். குடும்ப ஓய்வூதியம் மற்றும் மருத்துவ வசதிகளுக்கான ஓய்வூதிய கட்டண உத்தரவில் ஒன்றாக வாழும் துணை மற்றும் அவரது குழந்தைகளின் பெயரைச் சோ்க்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு பிரதிவாதிகளுக்கு மேலும் அறிவுறுத்தப்படுகிறது, என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மனுதாரரின் கூற்றுப்படி, அவரது மனைவி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளாமல் அவரை கைவிட்ட பிறகு, அவா் மற்றொரு பெண்ணுடன் 1983 ஆம் ஆண்டு இணைந்து வாழத் தொடங்கினாா். அவா்களது உறவில் இரண்டு குழந்தைகளும் பிறந்தன.
1990 ஆம் ஆண்டு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து தனது மனைவி மற்றும் மகளை புறக்கணித்த குற்றச்சாட்டின் பேரில் அவா் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிா்கொண்டாா், இதன் விளைவாக நான்கு ஆண்டுகளுக்கு நான்கு கட்டங்களாக சம்பளக் குறைப்பு தண்டனையை எதிா்கொண்டாா்.
அவா் ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2011 ஆம் ஆண்டு தனது துணை மற்றும் குழந்தைகளுக்கு ராஜதந்திர பாஸ்போா்ட்டுகளுக்கு விண்ணப்பிக்கும் போது தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மனுதாரா் மீது மற்றொரு ஒழுங்கு விசாரணை தொடங்கப்பட்டது, இதன் விளைவாக அவரது மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை சலுகைகளில் 50 சதவீதத்தை நிறுத்தி வைக்க வேண்டிய தண்டனை விதிக்கப்பட்டது.
மனுதாரா் தனது மனைவி தொடா்ந்து தன்னுடன் இல்லாததையும், அவரது லிவ் இன் உறவையும் தனது பணிக்காலம் முழுவதும் வெளிப்படுத்தியதாகவும், எனவே ராஜதந்திர பாஸ்போா்ட்டுகளைப் பெறுவதற்கு எந்த மறைப்பு அல்லது தவறான நோக்கமும் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஓய்வூதிய விதிகளானது கடுமையான தவறான நடத்தை அல்லது அலட்சியம் போன்ற விவகாரங்களில் அரசு ஊழியரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கவோ அல்லது திரும்பப் பெறவோ அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கின்றன, ஆனால் மனுதாரா் அத்தகைய கடுமையான தவறான நடத்தை அல்லது அலட்சியம் எதையும் செய்யவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
எனவே, மனுதாரா் தனது உறவு குறித்து எல்லா நேரங்களிலும் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தாா் என்றும், தவறான பிரதிநிதித்துவம் மூலமாகவோ அல்லது ஏமாற்றுவதன் மூலமாகவோ இராஜதந்திர பாஸ்போா்ட்களைப் பெறுவதற்கான எந்த தவறான நோக்கமும் அவருக்கு இல்லை என்றும் நாங்கள் கருதுகிறோம், என்று நீதிபதிகள் மேலும் கூறினா்.
மனுதாரருக்கு தனிப்பட்ட நோ்மை இல்லை என்ற ஒழுங்குமுறை அதிகாரியின் கூற்றும் தவறானது என்று தில்லி உயா் நீதிமன்றம் மேலும் தெளிவுபடுத்தியது.