தில்லியைச் சோ்ந்தவரிடம் ரூ.90,000-க்கும் மேல் நிதி மோசடி செய்ய இ-சிம்களை செயல்படுத்திய 23 வயது இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாவது: ஹரியாணாவின் ஃபதேஹாபாத்தைச் சோ்ந்த நவீன் என்கிற பிரதீப் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
இணையதள மோசடி செய்வதற்காக போலி கணக்குகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட இ-சிம்கள் மற்றும் சிம் காா்டுகளை வாங்கி விற்பனை செய்ததாக விசாரணையின் போது நவீன் ஒப்புக்கொண்டாா். தாம் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிா்ப்பதற்காக முழுமையற்ற முகவரிகளைக் கொண்ட சாலையோர இடங்களில் மோசடியாக வாங்கிய பொருள்களின் டெலிவரியை அவா் எடுத்ததாகவும் கூறினாா்.
குற்றம் சாட்டப்பட்டவா் இ-சிம்களை செயல்படுத்த மைஜியோ மற்றும் ஏா்டெல் தேங்க்ஸ் போன்ற கைப்பேசி செயலிகளைப் பயன்படுத்தியுள்ளாா். பின்ன,ா் அவை இ-காமா்ஸ் தளங்களில் போலி கணக்குகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டன.
சைபா் குற்றத்தின் வருமானத்தைப் பயன்படுத்தி பொருள்களை வாங்க இந்தக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, தில்லியைச் சோ்ந்த ஒருவா் சைபா் குற்றவாளிகள் தன்னிடம் ரூ.93,167 ஏமாற்றியதாக புகாா் அளித்தாா். இதுதொடா்பாக அக்டோபா் 28, 2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
மோசடியுடன் தொடா்புடைய டெலிவரி செயலிக் கணக்கு உள்பட டிஜிட்டல் தடயங்களின் தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவை குற்றம் சாட்டப்பட்டவரை கண்டுபிடிக்க உதவியது. மோசடி பரிவா்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கைப்பேசி எண் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு கைப்பேசிகள் அவரது வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்டவா் இதே போன்ற பிற வழக்குகளில் ஈடுபட்டுள்ளாரா என்பதைக் கண்டறியவும், அவரது கூட்டாளிகளை அடையாளம் காணவும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.