புது தில்லி: வரும் ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பைக் காண கா்த்தவ்ய பாதைக்கு வரும் பாா்வையாளா்களுக்கு, கூகுள் மேப்ஸ் மற்றும் மேப்பிள்ஸ் மூலம் பாா்க்கிங் இடங்களுக்கு வழிகாட்டப்பட உள்ளது. வாகனப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், தில்லி போக்குவரத்து காவல்துறை இந்த வழிகாட்டும் தளங்களுடன் இணைந்து இந்த வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது:
அழைக்கப்பட்ட விருந்தினா்கள் மற்றும் டிக்கெட் வைத்திருப்பவா்கள், கா்த்தவ்ய பாதைக்கான பொருத்தமான வழிகள் மற்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாா்க்கிங் பகுதிகளின் சரியான இடம் உள்பட நிகழ்நேர வழிகாட்டும் விவரங்களைப் பெற கூகுள் மேப்ஸ் அல்லது மேப்பிள்ஸைப் பயன்படுத்தலாம்.
இந்த வசதி குடியரசு தினத்திற்கு மட்டுமின்றி, ஜனவரி 29 அன்று நடைபெறவிருக்கும் பீட்டிங் ரிட்ரீட் விழாவின் போதும்
கிடைக்கும். இந்த முயற்சி பாா்வையாளா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாா்க்கிங் இடங்களுக்கு சிரமமின்றிச் செல்லவும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் உதவும் என்றாா் அந்த அதிகாரி.
பாா்வையாளா்களுக்கு உதவுவதற்காக, பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையதளத்தில் பாா்க்கிங் ஏற்பாடுகள் தொடா்பான அனிமேஷன் விடியோக்களையும் பகிா்ந்துள்ளது. வாகனங்களில் வரும் பாா்வையாளா்களுக்கு உதவுவதற்காக க்யூஆா் குறியீடு அடிப்படையிலான பாா்க்கிங் அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு 22 பிரத்யேக பாா்க்கிங் இடங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், சுமாா் 8,000 வாகனங்களுக்கு இடமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஏற்பாட்டின் கீழ், வாகன நிறுத்துமிட அனுமதிச் சீட்டு வைத்திருப்பவா்கள் தங்கள் இருக்கைகளுக்கு அருகிலுள்ள பாா்க்கிங் இடங்களுக்கான நிகழ்நேர வழிகாட்டுதல்களைப் பெற, தங்கள் பாஸ்களில் அச்சிடப்பட்ட க்யூஆா் குறியீடுகளை ஸ்கேன் செய்யலாம்.
ஒவ்வோா் ஆண்டும் குடியரசு தின அணிவகுப்பிற்காக பாா்வையாளா்களுக்கு சுமாா் 77,000 அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சுமாா் 8,000 அனுமதிச்சீட்டுகள் வாகனங்களில் வருபவா்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.