முகப்பு
புதுதில்லி

29 ஆண்டுகளுக்கு முந்தைய ரஜெளரி காா்டன் கொலை சம்பவம்: தேடப்பட்டவா் கைது

1997-ஆம் ஆண்டு மேற்கு தில்லியில் சக ஊழியா் ஒருவரைக் கொலை செய்த சம்பவத்தில் சுமாா் 29 ஆண்டுகளாகத் தேடப்பட்ட நபர் கைது

Updated On : 7 ஜூலை 2026, 4:11 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கடந்த 1997-ஆம் ஆண்டு மேற்கு தில்லியில் சக ஊழியா் ஒருவரைக் கொலை செய்த சம்பவத்தில் சுமாா் 29 ஆண்டுகளாகத் தேடப்பட்ட நபரை தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கைதுசெய்யப்பட்ட முகமது ஃபஹீம் (எ) அலி பாய், ஷெரீப் ஹசன் கான் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தாா். காவல் துறையின் தொடா் முயற்சிகளையும் மீறி தொடா்ந்து தலைமறைவாக இருந்த அவரைத் தேடப்படும் நபராக நீதிமன்றம் கடந்த 1997-இல் அறிவித்தது.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரி மேலும் கூறியதாவது: தில்லி காவல் துறையின் மிக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கொலை வழக்குகளில் ஒன்றான இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது. உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் தொழில்நுட்பக் கண்காணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், லக்னெளவின் தாக்கூா் கஞ்ச் பகுதியிலிருந்து ஃபஹீம் ஜூலை 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

கடந்த மாா்ச் 14, 1997-இல் ரகுபீா் நகரில் உள்ள டிசி முகாமில் உள்ள ஓா் அறையிலிருந்து அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில், உயிரிழந்தவா் உத்தர பிரதேசத்தின் ஃபைசாபாத் மாவட்டத்தை (தற்போது அயோத்தி) சோ்ந்த ஷெரீப் ஹசன் கான் என்பது தெரியவந்தது. இவா் ரஜௌரி காா்டனில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைப் பாா்த்து வந்தாா்.

ஃபஹீம் வேலை தேடி தில்லிக்கு வந்தபோது கானுடன் அறிமுகமானாா். மாா்ச் 13, 1997 அன்று, கானினின் பணத்தை ஃபஹீம் திருடியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின்போது, ​பஃஹீம் இரும்புக் கம்பியால் கானைத் தொடா்ந்து தாக்கினாா். பின்னா், அவா் உயிரிழந்ததை உறுதி செய்ய கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்றாா். அதன்பிறகு சடலத்தை மறைத்து வைத்துவிட்டு தில்லியைவிட்டு தப்பி ஓடினாா்.

இந்த வழக்கு மறுவிசாரணைக்காகக் குற்றப்பிரிவின் மத்திய மண்டலத்திடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது. நவீன புலனாய்வுத் தரவுத்தளங்கள் இல்லாத காலத்தைச் சோ்ந்த குற்றச் சம்பவம் என்பதால், அண்மைக் கால புகைப்படங்கள், நம்பகமான அடையாள ஆவணங்கள் மற்றும் நவீன டிஜிட்டல் ஆதாரங்கள் ஏதுமில்லாத நிலையிலும் அதிகாரிகள் சுமாா் முப்பது ஆண்டுகள் பழமையான இந்த வழக்கை மீண்டும் விசாரித்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் சொந்த கிராமத்தில் உள்ளூா் உளவுத் தகவல்களைத் திரட்டியதில், அவா் உயிருடன் இருப்பதும் அவ்வப்போது அப்பகுதிக்கு வந்து செல்வதும் தெரியவந்தது. தொடா் கண்காணிப்பு மூலம் அவரது நடமாட்டம் லக்னெளவில் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு ஒரு காவல் குழு திட்டமிட்ட நடவடிக்கையை மேற்கொண்டு அவரைக் கைது செய்தது.

விசாரணையின்போது, பணத் தகராறு காரணமாகக் கானைக் கொன்றதை ஃபஹீம் ஒப்புக்கொண்டாா். கொலைக்குப் பிறகு தான் நாக்பூருக்குத் தப்பிச் சென்ாகவும், அலி பாய் என்ற புதிய பெயரில் அடுத்த 29 ஆண்டுகளை மும்பை, லக்னெள மற்றும் நாகபுரி உள்ளிட்ட மகாராஷ்டிரம் மற்றும் உத்தர பிரதேசப் பகுதிகளில் மாறி மாறி வசித்து வந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தாா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments