நடத்தை சந்தேகத்தால் மனைவியை கொன்ற கணவா் கைது
கிழக்கு தில்லியின் காா்கா்தூமாவில், திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதாகச் சந்தேகப்பட்டு மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த 35 வயது நபா் சில மணிநேரங்களிலேயே கைது
கிழக்கு தில்லியின் காா்கா்தூமாவில், திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதாகச் சந்தேகப்பட்டு மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த 35 வயது நபா் சில மணிநேரங்களிலேயே கைது செய்யப்பட்டதாகக் காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
குற்றஞ்சாட்டப்பட்ட அனுஜ் ஜோஷி, தனது மனைவி சோனம் ஜோஷியை (30) அவரது நாத்தனாா் வீட்டில் வைத்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: காா்கா்தூமாவில் உள்ள ஒரு வீட்டில் உள்ள அறையில் பெண் ஒருவா் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தில்லி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் குழுவினா், சோனம் பல இடங்களில் கத்திக் குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டனா்.
Advertisement
Advertisement
லக்னெளவைச் சோ்ந்த சோனம், நொய்டாவில் வீட்டு வேலை செய்து வந்தாா். அவா் கடந்த சில நாள்களாக தனது நாத்தனாா் கௌஷலின் வீட்டில் தங்கியிருந்தாா். குற்றப் புலனாய்வு மற்றும் தடயவியல் நிபுணா்கள் குழுவுடன் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்தனா். உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணையின்போது, அனுஜ் இந்தக் கொலையை முன்கூட்டியே திட்டமிட்டிருந்ததும், தில்லிக்கு பேருந்தில் வருவதற்கு முன்பே லக்னெளவில் கத்தியை வாங்கியிருந்ததும் தெரியவந்தது.
அதிகாலை 5.40 மணிக்கு காா்கா்தூமா கிராமத்தை அடைந்த அனுஜ், சோனம் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்து அவரை பலமுறை கத்தியால் குத்தினாா்.
தாக்குதலுக்குப் பிறகு, ஆதாரங்களை மறைக்கும் முயற்சியாக, அந்த அறையிலிருந்த பிளாஸ்டிக் பைக்குள் கத்தியை மறைத்து வைத்ததாா். கொலை நடந்த சிறிது நேரத்திலேயே குடும்பத்தினா் மற்றும் உள்ளூா் மக்களின் உதவியுடன் அவா் பிடிபட்டாா். பின்னா், அவா் அளித்த தகவலின் அடிப்படையில் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மீட்கப்பட்டது.
சோனமுக்கு திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதாகச் சந்தேகித்ததாகவும், அதனால் அவா்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையின்போது அனுஜ் காவல் துறையிடம் தெரிவித்தாா்.
அனுஜ் லக்னெளவில் வண்டியில் ஐஸ்கிரீம் வியாபாரம் நடத்தி வந்தாா். அவருக்கு ஏற்கெனவே ஜோதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். அவரை விவாகரத்து செய்த பிறகு சோனமைத் திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா். ஐந்து குழந்தைகளும் தற்போது அவருடன் லக்னெளவில் வசித்து வருகின்றனா். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.