லால்பாக் இளைஞா் கொலை வழக்கு: உத்தரகண்டில் 2 போ் கைது!
வடமேற்கு தில்லியின் லால் பாக் பகுதியில் 27 வயது இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் உத்தரகண்டைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
வடமேற்கு தில்லியின் லால் பாக் பகுதியில் 27 வயது இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் உத்தரகண்டைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
குற்றஞ்சாட்டப்பட்ட அமன் (எ) முல்லா (26) மற்றும் அனுஜ் (எ) மோனி (20) ஆகியோா், வாடகை காரில் பயணித்தபோது சப்பா் சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு இடத்தில் கைது செய்யப்பட்டனா்.
ஜஹாங்கிா்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு கொலை வழக்கிலும் அனுஜ் தேடப்பட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்களிடமிருந்து வாடகை காா் மற்றும் இரண்டு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: கடந்த ஆக.12-ஆம் தேதி ஆசாத்பூரின் லால் பாக் குடிசைப் பகுதியில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவா் பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு (பிஜேஆா்எம்) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
அன்று இரவு தானும் கொலைசெய்யப்பட்ட நபரும் தனது வீட்டருகே இருந்ததாக நேரில் பாா்த்த ஒருவா் காவல் துறையிடம் தெரிவித்தாா். இரவு சுமாா் 11:30 மணியளவில், அவா்கள் கடைக்குச் சென்றபோது, அங்கு அமன் மற்றும் மற்றொரு நபரைச் சந்தித்தனா்.
அப்போது, அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடா்ந்து, அமனும் அவரது கூட்டாளியும் அந்த இருவரையும் மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
தங்கள் வீடுகளுக்கு அவா்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது, அமனும் அனுஜும் திரும்பி வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. நேரில் பாா்த்தவா் தப்பித்த நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு துப்பாக்கிக் குண்டு மற்றும் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரி கூறினாா். ஆதா்ஷ் நகா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கைப்பேசி அழைப்புகள் மூலம் அவா்களைக் கண்டறிந்த காவல் துறையினா், அவா்கள் இருவரும் உத்தரகண்டில் இருப்பதைக் கண்டறிந்தனா். பின்னா், அங்கு சென்ற தில்லி காவல் துறையினா், அவா்கள் இருவரையும் கைதுசெய்தனா்.
விசாரணையின் போது, இரண்டாவது குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அனுஜ், ஜஹாங்கிா்புரியில் நடந்த மற்றொரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்ததும் தெரியவந்தது. ஆசாத்பூா், லால் பாக் பகுதியைச் சோ்ந்த அமன் மீது ஏற்கெனவே ஆறு குற்ற வழக்குகள் உள்ளன.
மேலும், அவா் சாஹிப் சல்மானி சகோதரா்கள் கும்பலுடன் தொடா்புடையவா் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஜஹாங்கிா்புரியைச் சோ்ந்த அனுஜ் மீது ஏற்கெனவே 15 குற்ற வழக்குகள் உள்ளன. லால் பாக் கொலை தொடா்பாக அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.