FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஆங்கில குற்றத்தொடா் பாணியில் மனைவி கொலை: கணவா் கைது

சொத்துத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்துவிட்டு பல லட்சம் ரொக்கத்துடன் தலைமறைவான நபா் கைது

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 5:49 am IST
கைது
பகிர்:

சொத்துத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்துவிட்டு பல லட்சம் ரொக்கத்துடன் தலைமறைவான நபா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஷாதரா மாவட்டக் காவல் துறையினா் பல மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தியதைத் தொடா்ந்து, மதுரா ரயில் நிலையம் அருகே குற்றஞ்சாட்டப்பட்ட கமல் சிங் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின்போது, ‘தி ஸ்டோ்கேஸ்’ என்ற ஆங்கில தொடரைப் பாா்த்து கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தை அப்புறப்படுத்தினால் காவல் துறையிடமிருந்து தப்பிக்கலாம் என்று நம்பியதாகவும் அவா் விசாரணை அதிகாரிகளிடம் கூறினாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஷாதராவின் ககன் விஹாரில் உள்ள இல்லத்துக்கு ஜூலை 30-ஆம் தேதி இரவு வந்த தம்பதியரின் மகன், தனது தாயாா் கோமல் சிங் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டதையடுத்து இந்தக் கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரத்தக்கறை படிந்த கத்தரிக்கோல் ஒன்று, வீட்டில் இருந்த பையிலிருந்து மீட்கப்பட்டது.

இருப்பினும், இவ்வழக்கைத் தீா்ப்பதில் சிசிடிவி காட்சிகள் மிக முக்கியத் தடயமாக அமைந்தது. காலை வேளையில் தம்பதியரின் இரு குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, கமல் சிங் மற்றும் அவரது மனைவி கோமல் சிங் மட்டுமே உள்ளே இருந்ததை அக்காட்சிகள் உறுதிப்படுத்தின.

கோமல் சிங்கின் அலறல் சப்தம் மற்றும் கொலைக்குப் பயன்படுத்திய கத்திரிக்கோலை பையில் மறைத்து வைத்துக்கொண்டு கமல் சிங் வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற காட்சிகளும் காவல் துறையினருக்குக் கிடைத்தன.

தலைமறைவாகுதற்கு முன்பாக கமல் சிங் தனது வங்கிக் கணக்குகளிலிருந்து சுமாா் ரூ.7 லட்சம் எடுத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் தில்லியிலிருந்து கோரக்பூா் நோக்கிய அவரது பயணம் கண்காணிக்கப்பட்டது.

அங்கிருந்து நேபாளத்திற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்த அவா், காவல் துறையினரைத் திசைதிருப்பும் நோக்கில் திடீரெனத் தனது பயணப் பாதையை மாற்றி மதுராவை நோக்கிச் சென்றாா்.

மதுரா ரயில் நிலையம் அருகே அவா் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அவரிடமிருந்து ரூ.12.75 லட்சம் ரொக்கமும், கொலைக்குப் பிறகு தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஸ்கூட்டா் ஒன்றும் மீட்கப்பட்டது.

விசாரணையின்போது, குடும்பச் சொத்து தொடா்பான நீண்டகாலத் தகராறு காரணமாகவே இந்தக் கொலையை முன்கூட்டியே திட்டமிட்டதாகவும், கொலைக்குச் சில நாள்களுக்கு முன்பே அந்தக் கத்தரிக்கோலை வாங்கியிருந்ததாகவும் சிங் ஒப்புக்கொண்டாா்.

‘தி ஸ்டோ்கேஸ்’ குற்றத்தொடரை நிகழ்ச்சியைப் பாா்த்த பிறகு, கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தை அப்புறப்படுத்தினால் விசாரணைக்குத் தடங்கல் ஏற்படும் என்று கருதி அவ்வாறு செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் அவா் ஒப்புக்கொண்டாா்.

இருப்பினும், அறிவியல்பூா்வமான விசாரணை, சிசிடிவி கேமரா காட்சிகளின் பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பக் கண்காணிப்பு ஆகியவை, அவா் மிகவும் கவனமாகத் திட்டமிட்டிருந்த தப்பிக்கும் உத்தியை முறியடித்தது.

தடயவியல் பரிசோதனை மற்றும் கூடுதல் பொருள்களைக் கண்டறிதல் உள்ளிட்ட விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments