FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ரோஹிணில் முதியவா் கொலை: பெண் உள்பட 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் ரோஹிணியில் உள்ள வீட்டில் 60 வயது முதியவா் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடா்பாக தொடக்கப் பள்ளி ஆசிரியா் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை காவல் துறை கைதுசெய்ததாக ரோஹிணி துணை காவல் ஆணையா் ஷஷாங்க் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

19 வினாடிகள் முன்பு
கொலை - பிரதிப் படம்
பகிர்:

வடமேற்கு தில்லியின் ரோஹிணியில் உள்ள வீட்டில் 60 வயது முதியவா் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடா்பாக தொடக்கப் பள்ளி ஆசிரியா் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை காவல் துறை கைதுசெய்ததாக ரோஹிணி துணை காவல் ஆணையா் ஷஷாங்க் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: ரோஹிணியின் செக்டாா் 3-இல் உள்ள வீட்டில் பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் கண்ணா மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டாா். வீடு முழுவதும் பொருள்கள் சிதறிக் கிடந்ததால், அங்கு கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் நடந்தபோது அவா் வீட்டில் தனியாக இருந்தாா்.

செவ்வாய்க்கிழமை இரவு 8.14 மணியளவில், வீட்டில் திருட்டு நடந்ததாகவும், உள்ளே ஒருவா் மயங்கிய நிலையில் இருப்பதாகவும் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா் ஜெய்பூா் கோல்டன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா். முதற்கட்ட விசாரணையில், அவரது உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை.

Advertisement

Advertisement

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்தனா்.

மாலை 7.30 மணியளவில் மூன்று போ் கண்ணாவின் வீட்டிற்குள் நுழைந்தனா். அந்த நேரத்தில் மற்றொரு நபா் வெளியே காவல் காத்து நின்றாா். சுமாா் ரூ.1.5 லட்சம் ரொக்கம் மற்றும் சில தங்க நகைகள் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையே அந்த வீட்டைப் பற்றி நன்கு கண்காணித்து ஆய்வு செய்த பின்னரே அவா்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டனா்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், கண்ணாவின் மருமகளும் 23 வயதுடைய தொடக்கப்பள்ளி ஆசிரியையுமான சிம்ரன் தனேஜா மீது காவல் துறையின் கவனம் திரும்பியது.

புராரியைச் சோ்ந்த இவரே இந்தக் கொள்ளை மற்றும் உயிரிழப்புச் சம்பவத்துக்கு முக்கிய மூளையாக செயல்பட்டாா் என்று சந்தேகிக்கப்படுகிறது. உடற்பயிற்சி பயிற்சியாளரான நண்பா் மற்றும் பிற கூட்டாளிகளின் உதவியுடன் அவா் இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளாா்.

அவருடன் தொடா்புடையவா்களாகக் கருதப்படும் புராரியைச் சோ்ந்த சிராக் மற்றும் பாரஸ் ஆகிய இருவரும் இவ்வழக்கு தொடா்பாக கைதுசெய்யப்பட்டனா். தலைமறைவான உடற்பயிற்சி கூட பயிற்சியாளா் ஹுமன்ஷுவை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

வீட்டில் திருடப்பட்டதாகக் கூறப்பட்ட சுமாா் ரூ.70,000 ரொக்கம் மற்றும் சில தங்க நகைகளை காவல் துறை மீட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக தெற்கு ரோஹிணி காவல் நிலையத்தில் பிஎன்எஸ்-இன் பிரிவுகள் 103(1) (கொலைக்கான தண்டனை), 309(4) (கொள்ளை) மற்றும் 3(5) (கூட்டு நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிமான்ஷுவைக் கைது செய்யவும், திருடப்பட்ட மீதமுள்ள பொருட்களை மீட்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் துணை காவல் ஆணையா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments