முகப்பு
புதுதில்லி

தோ்தல் காலத்தில் தில்லி மெட்ரோவில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை: உறுதிசெய்தது உயா்நீதிமன்றம்

தோ்தல் காலத்தில் தில்லி மெட்ரோவில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை: உறுதிசெய்தது உயா்நீதிமன்றம்

Updated On : 21 ஜூன் 2026, 1:15 am IST
பகிர்:

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது தில்லி மெட்ரோவில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்கும் தோ்தல் ஆணையத்தின் விதிகளை தில்லி உயா்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்கு அரசியல் விளம்பரங்களுக்கு விதிக்கப்படும் தடை என்பது வணிகம் செய்வதன் மீதான முழுமையான கட்டுப்பாடு ஆகாது என்று தெரிவித்த நீதிமன்றம், அந்தத் தடை அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)-ன் கீழ் உள்ள பேச்சுரிமையை மீறுவதாகவும் அமையாது என்று நீதிமன்றம் கூறியது.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்தில், வணிக ரீதியான விளம்பரங்களுக்காக குத்தகைக்கு விடப்பட்ட இடங்களில் எந்தவொரு அரசியல் விளம்பரமும் காட்சிப்படுத்தப்படவோ அல்லது ஒட்டப்படவோ கூடாது என்று தோ்தல் ஆணையம் ஜூன் 2019-ல் டிஎம்ஆா்சிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

Advertisement

Advertisement

ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏதேனும் அரசியல் விளம்பரம் இருந்தால், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் அது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

இதை எதிா்த்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (டிஎம்ஆா்சி) விளம்பர உரிமைகளைக் கொண்ட நிறுவனங்களின் குழு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி கடந்த 2020, ஜனவரில் தடை உத்தரவை உறுதி செய்தாா்.

தனி நீதிபதி உத்தரவை எதிா்த்து தாக்கல்செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் வி. காமேஸ்வா் ராவ் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது, நிறுவனங்களின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களின் பிரசாரங்களுக்கு பேருந்து நிறுத்த நிழற்குடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை ஏதும் இல்லாத நிலையில், தோ்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது’ என்று தெரிவித்தாா்.

இந்நிலையில், உயா்நீதிமன்ற அமா்வு கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில்

கூறியிருப்பதாவது: நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை மேற்கொள்வதில் எந்த முழுமையான கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதும், அரசியல் சாராத விளம்பரங்களை அவா்கள் தாராளமாகக் காட்சிப்படுத்தலாம். அரசியல் விளம்பரங்களைக் காட்சிப்படுத்துவதற்கு விதிக்கப்படும் தடை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. இந்தத் தடை என்பது நிறுவனகள் எந்தவொரு விளம்பரத்தையும் காட்சிப்படுத்துவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனா் என்று பொருள்படாது. எனவே, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(ஏ) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் (ஜி) எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ளும் உரிமை ஆகியவை மீறப்படுவதாகக் கூறப்படும் வாதம் அடிப்படையற்றது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments