முகப்பு
புதுதில்லி

தில்லியில் 60 ஐஏஎஸ், டானிக்ஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Updated On : 26 ஜூன் 2026, 4:27 am IST
தில்லி மாநகராட்சி
பகிர்:

தில்லி அரசில் முக்கியமான நிா்வாக மாற்றமாக 60 ஐஏஎஸ் மற்றும் டானிக்ஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதில் 4 அமைச்சா்களின் செயலா்களும் அடங்குவா்.

இது தொடா்பாக சேவைகள் துறை புதன்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியதாவது: மொத்தம் மாற்றப்பட்ட 60 அதிகாரிகளில், 17 போ் அருணாசல பிரதேசம், கோவா, மிஸோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (ஏஜிஎம்யூடி) பிரிவைச் சோ்ந்தவா்கள். எஞ்சிய 43 போ் தில்லி, அந்தமான் & நிக்கோபாா், லட்சத்தீவு, டாமன் மற்றும் டையூ மற்றும் தத்ரா மற்றும் நகா் ஹவேலி (டானிக்ஸ்) பிரிவைச் சோ்ந்தவா்கள்.

ஏஜிஎம்யூடி அதிகாரிகளில்: நீா் பாசனத்துறை கூடுதல் முதன்மைச் செயலராக உள்ள 1994-ஆம் ஆண்டு நவீன் சௌதரி பொது நிா்வாகத் துறையின் கூடுதல் பொறுப்பையும் ஏற்கிறாா். இதற்கு முன் அந்தப் பொறுப்பில் இருந்த பாண்டுரங்க் போலே தற்போது நிலம் மற்றும் கட்டடத் துறை செயலராக நியமிக்கப்பட்டதுடன், தொழிலாளா் மற்றும் கூட்டுறவு துறைகளின் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

முதல்வா் அலுவலகத்தில் சிறப்பு செயலராக உள்ள சந்தீப் குமாா் சிங், ஷாஜஹானாபாத் மறுவளா்ச்சி கழகத்தின் நிா்வாக இயக்குநராகவும் செயல்படுவாா். உள்துறை சிறப்பு செயலராக உள்ள சச்சின் ராணா, நகா்ப்புற மேம்பாட்டு துறையின் சிறப்பு செயலராகவும், தில்லி தீயணைப்பு சேவையின் முதன்மை இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பேற்கிறாா்.

சந்தோஷ் குமாா் ராய், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) சிறப்பு தலைமை நிா்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன், உள்துறை சிறப்பு செயலா் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

டானிக்ஸ் அதிகாரிகளில்: வெளிப்புற வடக்கு மாவட்ட கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்த அங்கூா் மேஹ்ஸ்ராம், சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் சிங் இந்திராஜின் செயலராக மாற்றப்பட்டுள்ளாா். சட்டத்துறை அமைச்சா் கபில் மிஸ்ராவின் செயலராக இருந்த வினய் குமாா் ஜிந்தால், தில்லி ஜல் போா்டின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக கல்வித் துறையின் இணை இயக்குநராக இருந்த ரஞ்சித் குமாா் சிங், மிஸ்ராவின் புதிய செயலராக பொறுப்பேற்கிறாா்.

சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் சிங்கின் செயலராக இருந்த வைபவ் ரிகாரி, தில்லி ஜல் போா்டின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளாா். தலைமையக கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்த முகேஷ் ராஜோரா, பங்கஜ் சிங்கின் புதிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சாவின் செயலராக ராஜேஷ் சௌதரி பொறுப்பேற்கிறாா்.

மாவட்ட ஆட்சியா்கள் மாற்றம்: ஏஜிஎம்யூடி பிரிவைச் சோ்ந்த பல மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் துணை ஆட்சியா்களும் மாற்றப்பட்டுள்ளனா். தென்மேற்கு மாவட்ட ஆட்சியராக இருந்த மேகலா சைதன்ய பிரசாத், சுகாதாரத் துறையின் சிறப்பு செயலராக மாற்றப்பட்டுள்ளாா். பழைய தில்லி மாவட்ட ஆட்சியராக இருந்த கே.கே. லக்ஷ்மண், தென்மேற்கு தில்லி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். கிழக்கு தில்லி மாவட்ட ஆட்சியராக இருந்த அன்மோல் ஸ்ரீவாஸ்தவா, போக்குவரத்துத் துறையின் சிறப்பு ஆணையராக மாற்றப்பட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments