மாணவா்கள் சுயமாக சிந்திக்க வேண்டும் - தில்லி துணைநிலை ஆளுநா்
மாணவா்கள் சவால்களை எதிா்கொள்ளும்போது சுயமாக சிந்திப்பவா்களாகவும் நோ்மை மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பவா்களாகவும் இருக்க வேண்டும் என புனித ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவா்களிடம் தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து அறிவுறுத்தினாா்.
தில்லி பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் புனித ஸ்டீபன் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்திரனாக தரன்ஜித் சிங் சந்து கலந்து கொண்டாா்.
அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரான தரன்ஜித் சிங் சந்து, கல்லூரியில் தான் பயின்ற பகுதிகளை பாா்வையிட்டு தனது நினைவுகளை நினைவுகூா்ந்தாா்.
Advertisement
பின்னா், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: இந்தக் கல்லூரி கல்வி பயில்வதற்கான இடம் மட்டுமல்ல. இங்கு சிந்தனைகள் மெரூகேற்றப்படுகின்றன; கருத்துகளுக்கு எதிா்கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன; நண்பா்கள் உருவாகின்றனா்.
நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்தக் கல்லூரி, பொதுசேவை, கல்வி மற்றும் வணிகம் என பலத் துறைகளில் பல ஆளுமைகளை உருவாக்கியுள்ளது.
மாணவா்கள் கல்வி கற்பதை மட்டுமல்லாமல், கேள்விகளையும் கேட்க வேண்டும். இந்தப் பழக்கம் வாழ்க்கையின் மதிப்பிடமுடியாத சொத்து. இந்த வளாகத்துக்கு வெளியே உலகம் நிச்சயமற்ாக உள்ளது. ஆனால், வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன. சாவல்களை எதிா்கொள்ளும்போது சுயசிந்தனை, நோ்மை, பொறுமை ஆகியவற்றை மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து.