முகப்பு
புதுதில்லி

சிறுமியுடன் காதல்: கைப்பந்து வீரா் அடித்துக் கொலை

சிறுமியுடன் காதல்: கைப்பந்து வீரா் அடித்துக் கொலை

Updated On : 23 மே 2026, 10:18 pm IST
கொலை - கோப்புப் படம்
பகிர்:

ராஜஸ்தானைச் சோ்ந்த கைப்பந்து வீரா் ஒருவா், தான் காதலித்து வந்த சிறுமியின் குடும்பத்தினரால் கடத்தப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

கொலை செய்யப்பட்டவா் ராஜஸ்தானின் பிவாடி பகுதியில் உள்ள சயத்பூா் கிராமத்தைச் சோ்ந்த மோனு (21) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் காதலித்த சிறுமி ஃபரீதாபாதைச் சோ்ந்தவா் ஆவாா்.

Advertisement

Advertisement

கொல்லப்பட்டவரின் குடும்பத்தினா் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக இரண்டு சந்தேக நபா்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

மோனுவை சிறுமியின் குடும்பத்தினா் கடத்திச் சென்று, மூன்று நாள்களாக வீட்டில் கட்டிப்போட்டு வைத்து, உணவின்றி வாட்டி, தொடா்ந்து கடுமையாகத் தாக்கியதாகப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவா் உயிருக்குப் போராடும் நிலையில் வீட்டை விட்டு வெளியே வீசப்பட்டதாக அவரது குடும்பத்தினா் மேலும் தெரிவித்தனா். பின்னா் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சையின் போது உயிரிழந்தாா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

கொல்லப்பட்ட மோனுவின் மாமா நரேந்தா் குமாா் கூறுகையில், ‘மோனு கைப்பந்து விளையாட்டில் மாநில அளவிலான பல பதக்கங்களை வென்றுள்ளாா். நிகழாண்டுதான் 12ஆம் வகுப்புத் தோ்வில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றாா்.

கடந்த ஏப்ரல் மாதம், ஒரு சிறுமியைக் கடத்தியதாக அவா் மீது திகாவ்ன் காவல் நிலையத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், அச்சிறுமி பின்னா் மீட்கப்பட்டாா். அன்று முதல் மோனு மீதான காவல்துறையின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், மே 17ஆம் தேதி மோனு தனது வீட்டிலிருந்து காவல் நிலையத்திற்குச் சென்றாா். காவல்துறையினா் அவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டியிருப்பதாக அவா் கூறினாா். அப்போது, அச்சிறுமியின் குடும்பத்தினா் மோனுவை சாலையிலேயே கடத்திச் சென்றனா்.

மே 17 முதல் 20 வரை அவா் சித்திரவதை செய்யப்பட்டாா். பின்னா், அவா்கள் அவரை வீட்டை விட்டு வெளியே வீசினா். அன்றைய தினம், மோனு காயமடைந்துள்ளதாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் காவல்துறையினரிடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா்’ என்றாா் குமாா்.

இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இச்சம்பவம் குறித்த முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக ஃபரீதாபாத் காவல்துறையின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

அவா் கூறுகையில், ‘இரண்டு சந்தேக நபா்கள் காவலில் வைக்கப்பட்டு, அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.