மூடப்படும் நிலையில் மதுரா கோட்ஸ் ஆலை?
அம்பாசமுத்திரம், ஆக. 10: தென் மாவட்ட மக்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்து வந்த மதுரா கோட்ஸ் ஆலை இப்போது மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆலையில் ஆள்குறைப்பு நடவடிக்கையால் 20 ஆண்டு
அம்பாசமுத்திரம், ஆக. 10: தென் மாவட்ட மக்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்து வந்த மதுரா கோட்ஸ் ஆலை இப்போது மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆலையில் ஆள்குறைப்பு நடவடிக்கையால் 20 ஆண்டுகளில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
தற்போது குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹார்வி சகோதரர்களால் 1880-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களில் தொடங்கப்பட்ட நூற்பாலைதான் ஹார்வி மில்.
இந்த ஆலை தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை அளித்தது.
நிர்வாக மாற்றங்களால் தற்போது மதுரா கோட்ஸ் என்ற பெயரில் இயங்குகிறது.
தாமிரபரணி நதிக்கரையில் பாபநாசத்தில் உள்ள இந்த ஆலையில் இயந்திரங்கள் அறிமுகம் ஆவதற்கு முன்னர் ராட்டையில் நூல் நூற்கும் பணியில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.
அதன்பிறகு, நீர்மின் சக்தி மூலம் இயந்திரங்கள் இயக்கப்பட்டு வந்தன.
இங்கு நூல் உற்பத்தி பிரிவு தவிர, தரமான சட்டைத் துணி ரகங்களும், ஆயத்த ஆடைகளுக்கு தேவையான துணி ரகங்களும் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
1980-ல் ஆலையில் 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை அளித்து வந்த இந்த ஆலை அதன்பிறகு இயந்திரமயமாக்கப்பட்டது.
இதனால், ஆள்குறைப்பு நடவடிக்கையை 1988-ம் ஆண்டு நிர்வாகம் தொடங்கியது. இதையடுத்து, தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வும் அளிக்கப்பட்டது.
1992-ம் ஆண்டு தொழிலாளர்கள் போனஸ் கேட்டு நடத்திய வலுவான போராட்டத்தைத் தொடர்ந்து ஆள்குறைப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டது.
தற்போது நிரந்தர தொழிலாளர்கள் சுமார் 700 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 2006-ம் ஆண்டுக்குப் பிறகு ஒப்பந்த அடிப்படையில் பெண்களை நிர்வாகம் பணியில் அமர்த்தியது.
குறைந்த ஊதியம், 3 ஆண்டு முடிவில் பல ஆயிரங்கள் என ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
5 ஆயிரம் தொழிலாளர்களை கொண்டு செய்ய வேண்டிய உற்பத்தியை 2 ஆயிரம் பேரை வைத்து செய்வதாகத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆலை நிர்வாகம் என்ன சொல்லுகிறது?
1993-ம் ஆண்டுக்குப் பிறகு ஜவுளித் தொழில் நலியத் தொடங்கியதால் கோவை உள்பட பல இடங்களில் ஆலைகள் மூடப்பட்ட நிலையில் ஜவுளி உற்பத்தி, வீவிங் பிரிவு ஆகியவற்றை மதுரா கோட்ஸ் மூடியது. இதனால், 6 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிட்டது.
ஜவுளி உற்பத்திப் பிரிவு மூடப்பட்டதால்தான் இப்போது 2 ஆயிரம் பேருக்காவது வேலை அளிக்க முடிகிறது.
இல்லையெனில் ஆலையை மூடி பல ஆண்டுகளாகியிருக்கும்.
ஆலையில் கோன் உற்பத்தி மட்டுமே உள்ளது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையாக தற்போது ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்.
ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு முழு அளவில் உற்பத்தி செய்ய இயலாது. மேலும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கும் திட்டம் இல்லை என்றும் ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜவுளி உற்பத்தியில் கோலோச்சி வந்த மதுரா கோட்ஸ் ஆலை நலிவடைந்திருப்பதால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படைந்துள்ளனர்.
இதே நிலை நீடித்தால் சில ஆண்டுகளில் ஆலை மூடப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.