வழிபாட்டுதலங்களில் அதிக இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள்
ஆலங்குளம், டிச. 21: திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில், அனைத்து மத வழிபாட்டு தலங்களில், கூம்பு வடிவ குழாய்கள் பொருத்தப்பட்டு, அதிகாலையிலே அதிக இரைச்சலுடன் கூடிய இசைத்தட்டுகள் மற்றும் பிராத்தனைகளை ஒல
ஆலங்குளம், டிச. 21: திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில், அனைத்து மத வழிபாட்டு தலங்களில், கூம்பு வடிவ குழாய்கள் பொருத்தப்பட்டு, அதிகாலையிலே அதிக இரைச்சலுடன் கூடிய இசைத்தட்டுகள் மற்றும் பிராத்தனைகளை ஒலிபரப்பி, ஒலிமாசுவை ஏற்படுத்துவதால், மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது.
ஆலங்குளம் பகுதியில் பல்வேறு மத வழிபாட்டு தலங்கள் உள்ளன. இவற்றில் சில வழிபாட்டு தலங்களில் தேவாலயம் மற்றும் கோயில்களைச் சுற்றி சுமார் 6 கூம்பு வடிவ குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் வாழும் பகுதியில் தெருக்களை நோக்கி இவற்றை நிறுவியுள்ளனர். இவை அனைத்தும் சுமார் 100 மீட்டர் சுற்றளவிலே அமைந்துள்ளது.
இந்த வழிபாட்டுத் தலங்களில், ஒரே நேரத்தில் அதிகாலை 4.30 முதல் 5.30 வரையிலும், மாலையில் 6.30 முதல் 8 மணி வரையிலும், பெரும்பாலான நாட்களில் அதற்கும் அதிகமான நேரங்களிலும், வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் முக்கிய தினங்களில் காலை 8 முதல் 12 மணிவரையிலும், காதைச் செவிடாக்கும் அளவில் அதிக பேர் இரைச்சலுடன் சுமார் 2 கிமீ தூரத்திற்கு கேட்கும் அளவிற்கு இசைத்தட்டுகள் மற்றும் பிரார்த்தனைகளை ஒலிபரப்புகின்றனர்.
இது தவிர ஒவ்வொரு மாதத்திலும் 10 நாட்களுக்கும் மேலாக விசேஷ பிரார்த்தனை என்ற பெயரில் எப்பொழுது வேண்டுமானாலும், கூம்புவடிவ ஒலிபெருக்கி குழாய்கள் மூலம் தாங்க முடியாத அளவிற்கு பேரிரைச்சலுடன் ஒலிபரப்பி வருகின்றனர். விழாக்காலங்களில் தெருக்கள் முழுவதும் குழாய்களை கெட்டி, சுமார் 10 தினங்களுக்கு இரவு பகல் என பாராமல் அனைத்து நேரங்களிலும் இசைத்தட்டுகள் ஒலிபரப்பப்படுகின்றன. இதனால், மாணவர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தவறு என்று தெரிந்திருந்தும் இந்நிகழ்வுகள் தடையின்றி தொடர்கின்றன.
இந்த வகையான ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதால், மாணவர்களை படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதய நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு நோயாளிகளுக்கு தூக்கமும், ஓய்வும் கெடுகின்றன. குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
ஆலங்குளத்தில் காய்கனிமார்கட், அரிசிஆலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை செய்பவர்கள், பல்வேறு ஷிப்ட்டுகளில் பணிபுரிந்து விட்டு, காலை 3 மணிக்கு, பகல் நேரங்கள் என எந்த நேரம் என இல்லாமல் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது.
ஆனால் வழிபாட்டு தலங்களில் அதிகாலையில் 4.30 மணிக்கெல்லாம் இசைத்தட்டுக்கள் ஒலிபரப்பப்படுவதால் தொழிலாளர்களும் தூக்கம் கெட்டு பாதிப்புறுகின்றனர்.
இதனால் பொது அமைதி பாதிக்கப்படுகிறது. பொதுமக்களின் சிவில் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. சுற்றுப்புறச்சூழல் ஒலியால் மாசுபடுகிறது.
கூம்புவடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு இருந்தும், ஒலியின் அளவு குறித்த வரைமுறைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தும் இதை பற்றி யாரும் சட்டை செய்வதில்லை.
அதிக இரைச்சலுடன் கூடிய கூம்பு வடிவ குழாய்களைப் பயன்படுத்த கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அரசாணையை பெரும்பாலும் வழிபாட்டு தலங்களில் பின்பற்ற படுவதில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆலங்குளத்தில் சில சமூக நல ஆர்வலர்களின் முயற்சியால் இந்த ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அரசின் மூலம் தடை ஏற்படுத்தினர்.
சில காலம் இதைப் பின்பற்றிய வழிபாட்டு தல நிர்வாகிகள், பின்னர் ஸ்பீக்கர்கள் சிலவற்றை அதிக உயரத்தில் கோபுரத்தில் கட்டி இதே போன்று இரைச்சலை ஏற்படுத்தினர்.
நாளடைவில் ஸ்பீக்கரை ஒதுக்கிவிட்டு மீண்டும் கூம்புவடிவகுழாய்களை உயரத்தில் கட்டி இதே பிரச்சனையை தொடக்கியுள்ளனர்.
இப் பிரச்னைக்குத் தீர்வு காண சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, கூம்பு வடிவ குழாய்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தி, ஸ்பீக்கர் போன்றவைகளை கோயில் மற்றும் தேவாலயங்களில் உள்பகுதியில் மட்டுமே வைத்து குறைந்த சப்தத்தில், யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் ஒலிபரப்ப செய்ய வேண்டும். இதற்கு கால தாமதமாகும் பட்சத்திலோ, இதே நிலை நீடித்தாலோ போராட்டம் நடத்த தயாராகி வருவதாக, சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.