முகப்பு
திருநெல்வேலி

புதிய பஸ் நிலையம்: பயணிகள் பெரும் துயர்

கோவில்பட்டி, அக். 27:   கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் மீண்டும் உயிர் பெற்று, அங்கு அனைத்துப் பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என நகர மக்களும், வெளியூர் பயணிகளும் வலியுறுத்துகின்றனர்.   கோவில்பட்டி அண்ணா

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:06 PM
பகிர்:

கோவில்பட்டி, அக். 27:   கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் மீண்டும் உயிர் பெற்று, அங்கு அனைத்துப் பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என நகர மக்களும், வெளியூர் பயணிகளும் வலியுறுத்துகின்றனர்.

  கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2000-ல் ரயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணி துவங்கியபோது, கோவில்பட்டி புறவழிச் சாலையில் தாற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

  இதற்கிடையில், நகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தாற்காலிக பஸ் நிலையத்தை, கூடுதல் பஸ் நிலையமாக்க நகராட்சியில் முடிவெடுக்கப்பட்டது.

Advertisement

  இந்த கூடுதல் பஸ் நிலையம், சென்னை, சேலம், கோவை, திருப்பூர், புதுவை போன்ற தொலைதூர நகரங்களுக்குச் செல்லும் பஸ்கள் புறப்படும் இடமாகச் செயல்படும் என்றும், இதன் மூலம் கோவில்பட்டி நகரில் போக்குவரத்துப் பிரச்னைகளுக்கு 60 சதவிகிதம் தீர்வு ஏற்படும் என்றும் நகராட்சிக் கூட்டத்தில் கூறப்பட்டது. எனவே, இத்திட்டத்திற்கு பெரும்பான்மையான கவுன்சிலர்கள் ஆதரவு அளித்தனர்.

  அதைத் தொடர்ந்து, சுமார் 4 ஏக்கரில் கட்டப்பட்ட கூடுதல் பஸ் நிலையத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2007 ஜூலையில் திறந்து வைத்தார்.

  ஆனால், அதன் பின்னர் அண்ணா பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வரவில்லை. இதைக் கண்டித்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

  ரயில்வே மேம்பாலங்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டதால், அனைத்து பஸ்களும் அண்ணா பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  ஆனால், இக்கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.

  தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், திருச்செந்தூர் உள்பட கோவில்பட்டியிலிருந்து புறப்படும் பஸ்கள் மட்டும் ஊருக்குள் வந்துச் சென்றன.

  இந் நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி முதல், வெளியூர் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்திலிருந்துதான் செயல்பட வேண்டும், அண்ணா பஸ் நிலையம், நகர பஸ் நிலையமாக மட்டுமே செயல்படும் என ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

  இதையடுத்து, தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், திருச்செந்தூர் வழித்தடத்தில் செல்லும் பஸ்களும், புதிய பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இதனால், வெளியூர் செல்லும் பயணிகள் பெரிதும் துயருகின்றனர்.

ஆட்டோவில் அதிக கட்டணம்:   பகல், இரவு நேரங்களில் புதிய பஸ் நிலையத்திலிருந்து நகர பஸ்கள் முறையாக இயக்கப்படவில்லை.   ஆட்டோவில் அண்ணா பஸ் நிலையத்திற்குச் செல்ல ரூ.50 முதல் ரூ.70 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  நடந்து செல்லலாம் என்றால், இளையரசனேந்தல் சாலை மற்றும் புறவழிச் சாலை பகுதியில் மின் விளக்குகள் இல்லாமல், இருளடைந்துள்ளது. இப்பகுதியில் மின்விளக்குகளை அமைக்க வேண்டும்.

  மேலும், நகர பஸ்கள் கோவில்பட்டி ரயில் நிலையம், அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்கள் வழியாக அண்ணா பஸ் நிலையத்துக்கு இயக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, அண்ணா பஸ் நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

கொதிக்கும் வெயிலில் தவிக்கும் பயணிகள்

வெளியூர் பஸ்கள் அனைத்தும் அண்ணா பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் அதன் வெளியே நின்று செல்கின்றன. அங்கு போதிய இடவசதி இல்லை, நிழல்குடையும் இல்லை. இதனால், பயணிகள் வெயிலில் தவிக்கின்றனர்.

  எனவே, அனைத்து பஸ்களும் அண்ணா பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments