முகப்பு
திருநெல்வேலி

மாட்டு வண்டியில் மணல்: நிரந்தர தீர்வு ஏற்படுமா?

 அம்பாசமுத்திரம், செப். 22: நீர்நிலைகளில் இருந்து அனுமதியில்லாமல் மணல் எடுக்கும் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதைத் தடை செய்யக் கூ

Updated On : 26 டிசம்பர், 2023 at 7:00 AM
பகிர்:

 அம்பாசமுத்திரம், செப். 22: நீர்நிலைகளில் இருந்து அனுமதியில்லாமல் மணல் எடுக்கும் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதைத் தடை செய்யக் கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அரசு அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

 திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி, கருணையாறு, ராமநதி, ஜம்புநதி உள்ளிட்ட நதிகள் பாய்கின்றன. மலைப் பகுதியிலும், சமவெளியிலும் பாயும் சிறு ஆறுகளும் தாமிரபரணியில் கலக்கின்றன.

 தாமிரபரணி ஆற்றில் இருந்து பல்வேறு கூட்டு குடிநீர்த் திட்டங்கள் அமைக்கப்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

 ஆறுகளில் பல இடங்களில் அரசின் மணல்குவாரிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும், மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதும் அதிகரித்துள்ளது.

 குடிநீர்த் திட்ட உறைகிணறுகள், பாலங்கள் அமைந்துள்ள இடங்களில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கப்படுவதால், குடிநீர்த் திட்டங்கள் சேதமடைந்து, பாலங்களும் பலமிழந்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

 200 வண்டிகள் பறிமுதல்: சேரன்மகாதேவி கோட்டத்தில் துணை ஆட்சியர் கே. வீரராகவராவ் பொறுப்பேற்ற பின்னர், கடந்த ஒரு மாதத்தில் 200 மாட்டு வண்டிகளும், 25-க்கும் மேற்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 வழக்கமாக பறிமுதல் செய்யப்படும் மாட்டு வண்டிகள் எச்சரிக்கைக்குப் பிறகு திருப்பி வழங்கப்படும். மினி லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால், தற்போது பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள் திருப்பி வழங்கப்படவில்லை. அதேநேரம் அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக, நீர்நிலைகளில் இருந்து யாருமில்லாத அதிகாலைப் பொழுதில் மணல் எடுப்பது அதிகரித்துள்ளது.

 மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான ஏஐடியூசி சார்பில் அம்பாசமுத்திரத்தில் செவ்வாய்க்கிழமை மாட்டுவண்டி தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

 தீர்வு என்ன?... சிறு சிறு கட்டுமானப் பணிகள், அரசின் திட்டப் பணிகளுக்கு நீர்நிலைகளில் இருந்து மாட்டு வண்டிகளில் எடுக்கப்படும் மணல் பயன்படுத்தப்படுகிறது. மாட்டு வண்டியில் மணல் எடுப்பது தடை செய்யப்பட்டால், கட்டுமான பணிக்கு தேவையான மணலுக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது.

 இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது.

 எனவே, நீர்நிலையில் உள்ள குடிநீர்த் திட்டங்கள், ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்து மணல் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

முழு கட்டுரையைப் படிக்க →