முகப்பு
திருநெல்வேலி

உரத் தட்டுப்பாடு, விலை ஏற்றம்: திணறும் விவசாயிகள்

ஆலங்குளம்,டிச.4: ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் பருவமழையால் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.  அதே சமயத்தில் குறிப்பிட்ட சில நி

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:26 PM
பகிர்:

ஆலங்குளம்,டிச.4: ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் பருவமழையால் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 அதே சமயத்தில் குறிப்பிட்ட சில நிறுவனத் தயாரிப்பு அடிஉரங்களுக்கு, சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

 நெல்சாகுபடி செய்யும் விவசாயிகள் நெற்பயிர்களுக்கு அடிஉரமாக டி.ஏ.பி, காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களையும், சிலர் இயற்கை உரங்களையும் பயன்படுத்துவர். திகமானோர் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, கந்தகச்சத்து ஆகியன 20:20:0:13 விகிதாசாரத்தில் கலந்துள்ள உரங்களையே பயன்படுத்துகின்றனர்.

 சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயிகளிடம் மிகவும் பிரபலமானவை ஸ்பிக் டி.ஏ.பி. அந்த நிறுவனம் மூடப்பட்ட பின் கேரளத்தில் தயார் ஆகும் பாக்டம்பாஸ் 20:20:0:13 என்னும் உரத்தை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கினர்.

 இதில் தழைச்சத்து, மணிச்சத்து, கந்தகச்சத்து ஆகியன குறிப்பிட்ட சதவிகிதத்தில் இருப்பதாகவும், எளிதில் கரையும் தன்மை கொண்டதாக இந்த உரம் உள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

 இதனால் இந்த உரத்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. கேரளத்தில் விற்பனை செய்தது போக குறிப்பிட்ட சதவிகிதமே தமிழகத்தில் விற்கப்படுவதும், அதை மட்டுமே பரவலாக விவசாயிகள் விரும்பிப் பயன்படுத்துவதும் இந்தத் தட்டுப்பாட்டுக்கு காரணமாக கூறப்படுகிறது.

 இங்குள்ள உரத் தேவையைப் பயன்படுத்தி சிலர், கேரளத்தில் இருந்து உரத்தைக் கொண்டு வந்து உர விற்பனையாளர்களிடமும், விவசாயிகளிடமும் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

 இந்த உரத்தின் அதிகபட்ச சில்லறை விலை விலை ரூ. 358.54 (50 கிலோ). ஆனால் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.500-லிருந்து ரூ. 550 வரை விற்கப்படுகிறது.

 கிராமப்புறங்களில் ரூ. 200-லிருந்து ரூ. 225 வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும், இன்னும் ஒரு வாரத்துக்குப் பின்பு ரூ. 600 வரை விலை கூட வாய்ப்புள்ளது எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

 பாக்டம்பாஸ் நிறுவனம் தவிர இப்கோ, கோதாவரி, நாகார்ஜுனா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இதே கலவையில் அடிஉரங்களை தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.

 ஆனால், விவசாயிகள் குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பில் மட்டுமே ஆர்வம் செலுத்துவதால் சந்தையில் இந்த உரத்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படுவதோடு, கூடுதல் விலைக்கும் விற்கப்படுகிறது.

 விவசாயிகளின் இத்தகைய மனோபாவத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் உரத் தயாரிப்பு நிறுவனங்கள், அதிகளவில் விற்பனையாகும் 20:20:0:13 உரங்களுக்குப் பதிலாக சல்பேட், பொட்டாஷ் போன்ற அதிகம் விற்பனையாகாத உரங்களையும் சேர்த்து விவசாயிகளின் தலையில் கட்டி விடுகின்றனர்.

 வேறு வழியில்லாமல் விவசாயிகள் அதிகபட்ச சில்லரை விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு உரத்தை கொள்முதல் செய்ய வேண்டிய சூழலில் உள்ளனர்.

அதனால்தான் கூடுதல் விலைக்கே விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் மேலூம் விலை உயர்வதோடு கடுமையான தட்டுப்பாடும்  ஏற்படும் என்கின்றனர் உர விற்பனையாளர்கள்.

  இத்தகைய உரத்தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்தைத் தவிர்க்க விவசாயிகள் முதலில் இயற்கை உரத்தைப் பயன்படுத்த முன் வரவேண்டும். இல்லையெனில் ஏதேனும் குறிப்பிட்ட நிறுவனத் தயாரிப்பு உரம் மட்டுமே நல்ல பயனளிக்கும் என்ற உணர்வோட்டத்தை மாற்றி, அதே கலவை கொண்ட பல்வேறு நிறுவனங்களின் உரங்களைப் பயன்படுத்த முன் வரவேண்டும்.

 தற்போது கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளான டி.ஏ.பி, 20:20:0:13, காம்ப்ளக்ஸ் போன்ற அடிஉரங்கள், யூரியா போன்ற மேல் உரங்கள் விற்பனையாகின்றன. அதுவும் அரசு நிர்ணயித்த விலைக்கே விற்கப்படுகிறது.

 தனிநபர் ஒருவருக்கு சுமார் 250 கிலோ வரை உரம் வழங்கப்படுகிறது. இத்தகைய வாய்ப்புகளை விவசாயிகள் பயன்படுத்தினால் குறிப்பிட்ட சில நிறுவனத் தயாரிப்புகளின் விலை அதிகரிப்பு தவிர்க்கப்படும். உரங்களின் தட்டுப்பாடும் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.