முகப்பு
திருநெல்வேலி

சபரிமலை சீசன் இன்று தொடக்கம்: குமரியில் வசதிகள் இல்லாத அவலம்

கன்னியாகுமரி, நவ.16:சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த சீசன் காலத்தில் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:13 PM
பகிர்:

கன்னியாகுமரி, நவ.16:சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் சீசன் காலங்களாகும்.

இந்த சீசன் காலத்தில் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் வட இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.

இந்த மூன்று மாதங்களிலும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு,பொங்கல் உள்ளிட்ட முக்கிய தினங்கள் இந்த சீசன் காலத்தில் வருவதால் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் அதிகரித்து காணப்படுவது வழக்கமானதாகும்.

சீசன் தொடங்குவதால் பேரூராட்சி நிர்வாகம் 270 தாற்காலிக சீசன் கடைகளை அமைத்துள்ளது. மேலும் வாகனக் குத்தகையும் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேரூராட்சிக்கு ரூ.2 கோடிக்கும் மேல் வருவாய் கிடைத்துள்ளது.

சீசன் களைகட்டத் தொடங்கியிருக்கும் நிலையில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை.

இது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.

பேரூராட்சியில் போதுமான நிதியிருந்தும் அடிப்படை வசதிகள் செய்யப்படாத நிலை கடந்த ஆண்டுகளைப் போலத் தொடர்கிறது.

சுற்றுலாப் பயணிகள் அதிகமாகக் கூடும் கடற்கரை, முக்கடல் சங்கமம், சன்னதித்தெரு, காந்தி நினைவு மண்டப சாலை உள்ளிட்ட இடங்களில் குடிதண்ணீர் கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் பஸ் நிறுத்தும் இடம், முக்கடல் சங்கமம், சன்னதித்தெரு உள்ளிட்ட இடங்களில் கழிப்பறை வசதி இல்லை என்பது சுற்றுலாப் பயணிகளை வேதனையில் ஆழ்த்துவதாக உள்ளது.காந்தி நினைவு மண்டபத்தில் இருந்து சூரியஅஸ்தமன காட்சிக் கோபுரம் வழியாக சிலுவை நகர் செல்லும் பாதையில் தெருவிளக்குகள் எரிவதில்லை என்ற புகார் பல ஆண்டுகளாகியும் சரி செய்யப்படவில்லை.

இந்தப் பகுதிகளில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதால் திருட்டு அதிகமாக நடைபெற்று வருகிறது. இங்கு  சுற்றுலாப் பயணிகள் இரவு நேரங்களில் நடமாட முடியாத நிலை உள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு தீவிரம் காட்டும் மாவட்ட நிர்வாகம் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் பற்றி சிந்திக்கவே இல்லை என்பது ஒட்டு மொத்த கடை வியாபாரிகளின் கருத்தாக உள்ளது.

 கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சியை அதிகப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

மாதம் தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு 3 கூட்டங்கள் நடைபெற்றது. ஆனால் அந்த கூட்டம் எவ்வித அறிவிப்பும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டது.இதுவும் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் தடையாக அமைந்து விட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.