ஆலங்குளம் பகுதியில் பெருகும் காற்றாலைகள்; அருகும் விளைநிலங்கள்!
ஆலங்குளம்,நவ.17: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெருகி வரும் காற்றாலைகளால், விளைநிலங்கள் அருகிவருவதோடு, வருங்காலங்களில் வீடுகட்ட மனைகளும் இல்லாத சூழல் ஏற்பட்டு வ
ஆலங்குளம்,நவ.17: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெருகி வரும் காற்றாலைகளால், விளைநிலங்கள் அருகிவருவதோடு, வருங்காலங்களில் வீடுகட்ட மனைகளும் இல்லாத சூழல் ஏற்பட்டு வருகிறது.
ஆலங்குளம் ஒன்றியத்தில் வீராணம், ஊத்துமலை, ரெட்டியார்பட்டி உள்பட வடக்குப் பகுதியில் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இங்குள்ள தரிசு நிலங்களில் ஆரம்பித்த இந்தக் காற்றாலைகள், தொடர்ந்து விளைநிலங்கள், வீட்டுமனைகளுக்குத் தகுதியான இடங்களிலும் பெருகிவிட்டன.
இப்போது ஆலங்குளம் மற்றும் அதன் மேற்கு, தெற்கு பகுதிகளில் புதிதாக காற்றாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆலங்குளம், அத்தியூத்து, பூலாங்குளம், ஆண்டிபட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் நிறுவப்பட்டுள்ளன.
காற்றாலை நிறுவனத்தினர் முதலில் தரிசு நிலங்களை சந்தை நிலவரத்தைவிட கூடுதல் விலைக்கு வாங்குகின்றனர். அங்கு முதலில் காற்றாலைகளை அமைத்துவிட்டு படிப்படியாக அருகில் உள்ள விளைநிலங்களையும் வாங்கிவிடுகின்றனர்.
இதனால் ஆலங்குளம் பகுதியில் விளைநிலங்கள் மட்டுமன்றி, வீட்டுமனைகளுக்கான சந்தை விலையும் அதிக அளவில் தரகர்களால் நிர்ணயம் செய்யப்பட்டு விடுகிறது. சாமானியர்களால் வீட்டுமனை மட்டுமன்று, தரிசுநிலம்கூட வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.
ஆலங்குளத்தில் இப்போதைய நிலவரப்படி, உடனடியாக வீடு கட்ட தகுதியான இடத்தின் விலை சென்ட் | 1 லட்சம். இந்த விலை ஏற்றத்துக்கு காற்றாலைகளின் வரத்தும், தரகர்களின் அதிக தலையீடும்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
காற்றாலைகளுக்கு நிலங்களை வி ற்பதில் மோசடிகள் நடப்பதாகவும், அதில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காற்றாலைகளுக்காக நீர்நிலைப் பகுதிகளான கால்வாய் மற்றும் குளங்கள், சாலையோரங்கள் என பொதுமக்களுக்கு இடையூறாக பல இடங்களில் மின் கம்பங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் சாலைகளை விரிவுபடுத்தவோ குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்தவோ இந்த மின் கம்பங்கள் இடையூறாக இருக்கின்றன. விளைநிலங்களின் மையப் பகுதிகளில் அமைக்கப்படும் மின் கம்பங்களால் விவசாயப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
காற்றாலைகளின் அபரிமிதமான வளர்ச்சி, இப் பகுதியில் உள்ள விளைநிலங்களைப் பாதிப்பதோடு, வீட்டுமனைகளுக்கும் கடும் கிராக்கியை ஏற்படுத்துகிறது. காற்றாலை நிறுவுவதால் மின் உற்பத்தி பெருகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம் காற்றாலைகளை நிறுவும் விஷயத்தில், உரிய வரைமுறைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.