முகப்பு
திருநெல்வேலி

108 அழைப்பு போல் செயல்படுமா 101 ?

      கடையநல்லூர்,பிப்.2: அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொள்ளும் 108 அழைப்பு போல் 101 அழைப்பு வசதியும் மேம்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  விபத்து மற்றும் குறிப்பிட்ட மர

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:21 PM
பகிர்:

கடையநல்லூர்,பிப்.2: அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொள்ளும் 108 அழைப்பு போல் 101 அழைப்பு வசதியும் மேம்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 விபத்து மற்றும் குறிப்பிட்ட மருத்துவச் சேவைகளைப் பெற யார் வேண்டுமானாலும் எந்த பகுதியில் இருந்தாலும் 108 என்ற எண்ணை அழைத்தால் அந்த அழைப்பு குறிப்பிட்ட ஒரு மையத்துக்குச் செல்லும். மறுமுனையில் பேசும் நபர்களிடம், நாம் சரியான தகவலை, எந்த மாவட்டம், எந்த நகரம் மற்றும் விபத்து நடைபெற்ற இடம் போன்றவற்றைத் தெளிவாகக் கூறினால் போதும். தகவலைப் பெற்றுக் கொள்ளும் அந்த தொலைபேசி இயக்குநர்கள், உடனடியாக விபத்து நடந்த பகுதிக்கு அருகேயுள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தை விபத்து பகுதிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

  இதற்கிடையே நமது தொலைபேசி எண்ணையும் பதிவு செய்து கொள்கின்றனர். சில சூழ்நிலைகளில் விபத்து நடைபெற்ற இடத்தைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டால் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணிபுரியும் ஊழியர்களே நம்மிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சரியான விவரத்தைப் பெற்றுக் கொண்டு, விபத்து நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வருகின்றனர். இதனால் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முதலுதவி தாமதமின்றிக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது.

  ஆனால், தீயணைப்பு நிலையத்தைத் தொடர்பு கொள்ள 101 என்ற எண்ணை அழைத்தால், அந்த அழைப்பு மாவட்ட தலைநகரங்களிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களுக்குத்தான் செல்கிறது. உதாரணமாக, கடையநல்லூர் பகுதியிலிருந்து 101 என்ற எண்ணை அழைத்தால் (கைபேசியிலிருந்து) அந்த அழைப்பு பாளையங்கோட்டையிலுள்ள தீயணைப்பு நிலையத்துக்குச் செல்கிறது.

   பின்னர் அந்த அலுவலகப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள தீயணைப்பு நிலைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு, விபத்து குறித்து தகவல் கொடுக்கும் நபரிடம் தெரிவிக்கும் நிலையே உள்ளது..

   இதனால் விபத்து நடைபெற்ற நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுப்பதில் சிரமம் நிலவி வருகிறது. இந்நிலையில் தகவல் கொடுக்கும் நபர் மீண்டும் அந்தப் பகுதியிலுள்ள தீயணைப்பு நிலையத்துக்கு, அந்த நிலையத்தின் தொலைபேசி எண் மூலம் தகவல் கொடுத்தால்தான் அந்த தீயணைப்பு நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள கூடிய நிலை உள்ளது.

   சில சமயங்களில் தகவல் கொடுக்க நினைக்கும் நபரின் கைபேசியில் பேசுவதற்கு பணமில்லாத நிலையில், விபத்து குறித்த தகவலைத் தெரிவிப்பதற்கு தேவையற்ற காலதாமதம் ஏற்படும் வாய்ப்பு உருவாகி வருகிறது,

  எனவே தீயணைப்புத் துறையை தொடர்புகொள்ள உபயோகிக்கும் 101 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டால், அது சம்பந்தப்பட்ட தீயணைப்பு நிலையத்துக்கு நேரடியாகச் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். அல்லது அந்த அழைப்பு மாவட்ட தீயணைப்புத் துறைக்கு சென்றால். அவர்களே அது குறித்த தகவலை சம்பந்தப்பட்ட தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கும் வகையில் (108 வசதி போல்) மாற்றம் செய்யப்பட வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

  இது குறித்து கிருஷ்ணாபுரம் வ.உ.சி. பேரவைத் தலைவர் முருகேசன் கூறியதாவது: விபத்து நடைபெறும் நிலையில், விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக முதலுதவியைக் கையாண்டு, அவர்களுக்குத் தேவையான முதல்கட்ட மருத்துவ வசதியை வழங்குவதற்காகத்தான் அரசு பல்வேறு வகையான வசதிகளை செய்து வருகிறது.

   108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் தனியார் அமைப்புக்களின் ஆம்புலன்ஸ் சேவை, போன்ற துரிதசேவைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருவதைக் கண்கூடாக காண முடியும். அதே நேரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பணியும் மகத்தானது.

  அத் துறையினரும் விபத்து உள்ளிட்ட எதிர்பாராத அசம்பாவித நேரங்களில் விரைவாக செயல்பட்டு வருவதை மறுக்க முடியாது. ஆனால் விபத்து குறித்த தகவலை தீயணைப்புத் துறைக்கு தெரிவிக்க நினைப்பவர்களுக்கு அருகேயுள்ள தீயணைப்பு நிலையத்தின் தொலைபேசி எண் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  எனவே அனைவருக்கும் தெரிந்திருக்கும் பொதுவான எண்ணான 101 என்ற எண்ணைத்தான் பொதுவாக அனைவரும் பயன்படுத்துவர். அப்படி உதவி செய்ய முற்படுபவர்களுக்கு, வேறொரு எண்ணில் தொடர்பு கொள்ளவும் என தெரிவித்தால், அவர்களின் உதவி செய்யும் எண்ணமும் கூட மாறுவதறகு வாய்ப்பிருக்கிறது.   101 என்ற எண்ணை நேரடியாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவுடன், அந்த அலுவலக ஊழியர்களே சம்பந்தப்பட்ட தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றார் முருகேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.