முகப்பு
திருநெல்வேலி

பிளெக்ஸ் போர்டுகளை இன்றே அகற்ற வேண்டும்

திருநெல்வேலி, ஜன. 8: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளெக்ஸ் போர்டுகளை ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) இரவுக்குள் அகற்ற வேண்டும். இல்லையெனில் அவை திங்கள்கிழமை காவல் துறை உதவியுடன்

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

திருநெல்வேலி, ஜன. 8: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளெக்ஸ் போர்டுகளை ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) இரவுக்குள் அகற்ற வேண்டும். இல்லையெனில் அவை திங்கள்கிழமை காவல் துறை உதவியுடன் அகற்றப்படும் என, அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சுப்பையன் தெரிவித்தார்.

  பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள நடை மேம்பாலம் மீது திமுகவினர் வைத்துள்ள பிளெக்ஸ் போர்டை அகற்றக் கோரி, கடந்த 6-ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்,  மறியலில் ஈடுபட்டனர்.

  இதையடுத்து அதிமுகவினர் 127 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிந்து  கைது செய்தனர். பின் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

  இதைத் தொடர்ந்து, அங்கு திமுகவினரின் பிளெக்ஸ் போர்டுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

  இந்நிலையில், மாநகரப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளெக்ஸ் போர்டை அகற்றவும், இதுபோன்ற பிரச்னைகள் மேலும் ஏற்படாமல் இருக்க அனைத்து அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.

  மாநகர காவல் துறை துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) அவினாஷ்குமார் முன்னிலை வகித்தார். அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  

மாநகராட்சி ஆணையர் சுப்பையன் பேசியதாவது:

 மாநகரப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து பிளெக்ஸ் போர்டுகளையும் ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் அவர்களே முன்வந்து அகற்ற வேண்டும். இல்லையெனில் திங்கள்கிழமை காலை வருவாய்த் துறை, மாநகராட்சி, காவல் துறை இணைந்து அந்த போர்டுகளை அப்புறப்படுத்துவர்.

  பிளெக்ஸ் போர்டு வைப்பது தொடர்பாக அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. நிகழ்ச்சி நடப்பதற்கு 3 தினங்களுக்கு முன்பு அனுமதி பெற்று போர்டு வைக்கலாம். நிகழ்ச்சி முடிந்த 2-வது தினம் போர்டை அகற்ற வேண்டும்.

  இந்த நடைமுறை இனி கண்டிப்புடன் பின்பற்றப்படும். மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் பாப்புலர் வி. முத்தையா, துணைச் செயலர் எஸ். பழனி, பொருளாளர் மகபூப்ஜான் ஆகியோர், முருகன்குறிச்சியில் திமுகவினர் வைத்துள்ள பிளெக்ஸ் போர்டை மாநகராட்சி அதிகாரிகளோ, காவல் துறையினரோ அகற்றாதவரை இக்கூட்டத்தில் பேசி எந்தப் பயனுமில்லை எனக்கூறி, திமுகவுக்கு எதிராக கோஷமிட்டவாறு கூட்டத்தைவிட்டு வெளியேறினர்.

  இவர்களைத் தொடர்ந்து தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டச் செயலர் ஆர். சண்முகவேலு, பொதுச் செயலர் காசி விஸ்வநாதன், மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர மாவட்டச் செயலர் வீ. பழனி, மதிமுக மாநகர மாவட்டச் செயலர் கே.எம்.ஏ. நிஜாம் உள்ளிட்டோரும் வெளிநடப்பு செய்தனர்.

  கூட்டத்தில், மாநகர காவல் துறை உதவி ஆணையர்கள் சொக்கலிங்கம் (நுண்ணறிவுப் பிரிவு), கே. ராமச்சந்திரன் (பாளையங்கோட்டை), லயோலா இக்னேஷியஸ் (திருநெல்வேலி) மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

  கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்டத் தலைவர் எஸ். சுந்தரராஜபெருமாள், பாஜக மாவட்டச் செயலர் குருசாமி, மண்டலத் தலைவர் வேல் ஆறுமுகம், எஸ்.சி. அணித் தலைவர் முருகதாஸ், மாநில இந்து வழக்கறிஞர் பிரிவு செயலர் குற்றாலநாதன், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக மாநில துணை பொதுச்செயலர் மோகன்ராஜ், தேமுதிக மாநகர் மாவட்டச் செயலர் முகம்மது அலி, சமக மாநகர் மாவட்டச் செயலர் எஸ். கணேசன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் பாரூக், செயலர் ரசூல்மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →