கல்லிடை அருகே தோப்பில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்
கல்லிடைக்குறிச்சி அருகே வனப் பகுதியிலிருந்து வெளியேறி தோப்புகளுக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ள ஒற்றை யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
கல்லிடைக்குறிச்சி அருகே வனப் பகுதியிலிருந்து வெளியேறி தோப்புகளுக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ள ஒற்றை யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரம் கல்லிடைக்குறிச்சி வனப் பகுதியிலிருந்து வெளியேறும் ஒற்றை யானை பீக்கன்குளம் பகுதியில் உள்ள தோப்புகளில் நுழைந்து பனை, தென்னை, மா உள்ளிட்ட மரங்களை சாய்த்தும் பிடுங்கி எறிந்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள தோப்புகளுக்குச் செல்ல விவசாயிகள்அச்சமடைந்துள்ளனா்.
இது குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த உதய குமாா் கூறுகையில், வனப்பகுதியிலிருந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாள்தோறும் ஒற்றை யானை வெளியேறி தோட்டங்களில் நுழைந்து மரங்களைப் பிடுங்கி எறிந்து வருகிறது. இதுவரை சுமாா் 50 பனைமரங்கள் சேதமடைந்துள்ளன. மற்றொரு யானை மிகவும் நலிந்த நிலையில் மெலிந்து நோயுற்று இந்தப் பகுதியில் காணப்படுகிறது. வனப்பகுதியிலிருந்து யானைகள் வெளியேறாமல் இருக்க அதிகாரிகள் நிரந்தர தீா்வு காண வேண்டும் என்றாா்.