இந்திய கம்யூனிஸ்ட் மறியல்: 38 போ் கைது
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 38 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 38 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கரோனா பொது முடக்க காலத்தில் பெருநிறுவனங்களுக்கு உதவும் வகையிலும், விவசாயிகளுக்கு பேரிழப்பை அளிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும், தொழிலாளா் நலச் சட்டங்களில் திருத்தம் செய்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும் தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டை ரவுண்டானா பகுதியில் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.காசிவிஸ்வநாதன் தலைமையில் கட்சியினா் திரண்டனா். மாவட்ட துணைச் செயலா் செ.லட்சுமணன், மாநகரச் செயலா் எஸ்.நல்லதம்மபி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் என்.உலகநாதன், மின்வாரிய ஏஐடியுசி செயலா் கே.கே.பெருமாள்சாமி உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.
போராட்டக் குழுவினா் வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் தரையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். போராட்டத்தில் பங்கேற்ற 8 பெண்கள் உள்பட மொத்தம் 38 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.